எந்தச் சூழ்நிலையையும் சமாளிப்போம் ! : சொல்கிறார் அந்தோணி

புதுடில்லி: ""கடந்த, 1962ம் ஆண்டு நடந்த சீனப்போருக்கு பின், இந்தியாவின் ராணுவ பலம் வலுப்படுத்தப்பட்டுள்ளது. எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் வகையில், முழுத் தகுதியும் பெற்றுள்ளது,'' என, மத்திய ராணுவ அமைச்சர், ஏ.கே.அந்தோணி தெரிவித்தார். டில்லியில் கடற்படை தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்ற, மத்திய ராணுவ அமைச்சர் அந்தோணி நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த, 60 ஆண்டுகளுக்கு முன், சீனாவுடன் நடந்த போரில்,
இந்தியாவுக்கு தோல்வி ஏற்பட்டது. அதற்கு முக்கிய காரணம், வடகிழக்கு பகுதியில், ராணுவத்திற்கு கட்டுமான வசதிகள், திருப்தியளிக்கும் வகையில் இல்லாததே. ஆனால், இப்போது நாம் வெகுவாக முன்னேற்றம் அடைந்துள்ளோம். இப்போது, நம் நாட்டை பாதுகாக்கும் தகுதியை பெற்றுள்ளோம். குறிப்பாக படை பலம், பாதுகாப்புக்கான வசதிகள், கட்டுமானம் என, பல நிலைகளிலும் வேகமான முன்னேற்றத்தை எட்டியுள்ளோம்.
எல்லை பிரச்னையில், சீனாவுடன் சுமுகமான நட்புறவை தொடர விரும்புகிறோம். இதற்காக, தொடர்ந்து பேசி வருகிறோம். இது திருப்தியளிக்கும் வகையில் உள்ளது. அதே சமயம், முப்படைக்குத் தேவையான பாதுகாப்பு கருவிகளை அளிப்பதிலும், கட்டுமான வசதிகளை விரிவுபடுத்துவதிலும், தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மின்னணு பாதுகாப்பில் பின் தங்கியிருந்தாலும், இதில் தற்போது, விரைவாக முன்னேறி வருகிறோம். முப்படைகளில் , ஹெலிகாப்டர் பயன்பாட்டை அதிகரித்து வருகிறோம். இதில் கடற்படைக்கு போதுமான அளவில் ஹெலிகாப்டர்கள் இல்லை என்ற குறைபாடு இருந்தது. இதைத் தீர்க்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்தோணி கூறினார்.

Comments