தமிழகத்துக்கு
செப்டம்பர் 20ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை வினாடிக்கு 9,000 கன
அடி தண்ணீர் திறந்து விடுமாறு காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தில் அதன்
தலைவரான பிரதமர் உத்தரவிட்டார். ஆனால், அதை கர்நாடகம் ஏற்காததால் தமிழகம்
உச்ச நீதிமன்றத்தை நாடியது.
கர்நாடகத்துக்கு கண்டனம் தெரிவித்த உச்ச
நீதிமன்றம், தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விடுமாறு உத்தரவிட்டது.
இதையடுத்து சில நாட்கள் தண்ணீரைத் திறந்த கர்நாடகம், தனது மாநிலத்தில்
இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகக் கூறி அதையும் திடீரென 8ம் தேதியுடன்
நிறுத்திவிட்டது.
இதையடுத்து கர்நாடகத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
இந்
நிலையில் தமிழகம், கர்நாடகத்தின் அணைகளில் உள்ள தண்ணீர் அளவு தொடர்பான
நிலைமையைக் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய குழு நேரில் பார்வையிட்டு
டெல்லி திரும்பியது.
இதையடுத்து தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி,
கேரளம் ஆகிய நான்கு மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் பங்கேற்கும் காவிரி
கண்காணிப்புக் குழுக் கூட்டம் டெல்லியில் இன்று கூட்டப்பட்டது.
மத்திய நீர்வளத்துறை செயலாளர் துருவிஜய் சிங் தலைமையில் இந்தக் கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடந்தது.
இக்கூட்டத்தில்,
தமிழகம் மற்றும் கர்நாடக அணைகளில் இருக்கும் தண்ணீரின் அளவு, கர்நாடகம்,
தமிழகத்தில் உள்ள பயிர்களின் நிலை ஆகியவை பற்றி நேரில் சேகரிக்கப்பட்ட
ஆய்வறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது தமிழகத்திற்கு
தண்ணீர் திறந்து விட வேண்டியதன் அவசியம் குறித்து தமிழக அதிகாரிகள்
எடுத்துக் கூறினார்கள். ஆனால் தங்களது மாநிலத்தில் வறட்சி நிலவுவதாகக் கூறி
தமிழகத்திற்கு திறந்து விட முடியாத சூழல் உள்ளதாக கர்நாடக அதிகாரிகள்
வாதிட்டனர்.
கர்நாடகாவிற்கு உத்தரவு:
இறுதியில்,
காவிரியில் தமிழகத்திற்கு 8.75 டிஎம்.சி தண்ணீர் திறந்துவிட வேண்டும்
என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் கர்நாடகத்திற்கு உத்தரவிட்டார்.
அக்டோபர் 15ம் தேதி முதல் மாத இறுதி வரை 8.75 டிஎம்.சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் கண்காணிப்புக் குழுவின் முடிவை ஏற்க மறுப்பு கர்நாடக அரசின் தலைமைச் செயலாளர் ரங்கநாத் கூட்டத்தில் இருந்து வெளியேறிவிட்டார்.
இதுவரை 27 முறை கூடியுள்ள கண்காணிப்புக் குழு:
இன்றைய கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி கேரள மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் பங்கேற்றனர்.
தமிழகத்தின்
சார்பில் தலைமைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி, பொதுப் பணித்துறைச்
செயலாளர் சாய் குமார், கர்நாடகத்தின் சார்பில் தலைமைச் செயலாளர் எஸ்.வி.
ரங்கநாத், புதுச்சேரி பொதுப் பணித்துறை பொறியாளர் பி. சாமிநாதன் ஆகியோர்
கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதுவரை 27 முறை கண்காணிப்பு குழுக் கூட்டம்
நடைபெற்றுள்ளன. அதில் பெரும்பாலான கூட்டங்கள் ஒருமித்த முடிவு
எட்டப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுவிட்டன. இந்த முறையும் கர்நாடக மாநிலத்தின்
தலைமைச் செயலாளர் கூட்டத்தில் இருந்து வெளியேறியதால் கூட்டம் அத்தோடு
முடிந்துவிட்டது.
நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு:
இந்
நிலையில் கர்நாடகத்தில் கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து காவிரியில்
தண்ணீர் திறப்பது கடந்த திங்கட்கிழமை இரவு முதல் திடீரென நிறுத்தப்பட்டது.
இதனால் காவிரியில் நீர்வரத்து குறைந்தது.
தற்போது காவிரி
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வரை தொடர்ந்து மழை
பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கலில் புதன்கிழமை அதிகாலை முதல் நீர்வரத்து
அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்தும்
அதிகரித்துள்ளது. ஆனால் தண்ணீர் திறக்கப்படுவதை விட குறைந்த அளவிலேயே
நீர்வரத்து இருப்பதால் அணையின் நீர்மட்டம் மெதுவாக குறைந்து வருகிறது.
தமிழக, புதுச்சேரி மனுக்கள் நாளை விசாரணை:
காவிரி
நதி நீர் கோரி தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் தாக்கல் செய்துள்ள
மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
காவிரி
நதியில் புதுச்சேரிக்கு உரிய நீரைப் பெற்றுத் தர உத்தரவிடக் கோரி தாக்கல்
செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு
வந்தது. அப்போது, இந்த மனுவை, தமிழகம் தாக்கல் செய்துள்ள மனுவுடன் சேர்த்து
வெள்ளிக்கிழமை விசாரிப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதி அறிவித்தனர்.
Comments