ரூ.8000 கோடிக்கு 10,000 ஏவுகணைகளை வாங்கிக் குவிக்கப் போகும் இந்தியா!

 Cabinet Clears Rs 8 000 Crore Missile Purchase
டெல்லி: ரஷ்யாவிடமிருந்து 10,000 இன்வார் ஏவுகணைகளை வாங்கவும், 200க்கும் மேற்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சானிக் க்ரூஸ் ஏவுகணைகளை வாங்கவும் ரூ. 8000 கோடி நிதியை அனுமதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான அனுமதியை மத்திய அரசின் பாதுகாப்புத்துறைக்கான அமைச்ரவைக் குழு வழங்கியுள்ளது.
இன்வார் ஏவுகணைகள் ராணுவத்தின் டி 90 ரக டாங்குகளில் பொருத்தப்படக் கூடியவை ஆகும். பிரம்மோஸ் ஏவுகணைகள் இந்திய விமானப்படையின் போர் விமானங்களில் பொருத்தப்படக் கூடியவை.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதியை வழங்கி முடிவெடுக்கப்பட்டது.
விமானப்படையின் பிரம்மோஸ் ஏவுகணைகளுக்கு மட்டும் ரூ. 6000 கோடி செலவிடப்படவுள்ளது. மீதமுள்ள தொகை இன்வார் ஏவுகணைகளை வாங்க பயன்படுத்தப்படும்.
பிரம்மோஸ் ஏவுகணைகளைப் பொருத்தவரை அதை முதலில் பரிசோதனையில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவிடம் உள்ள சுகோய் போர் விமானங்களில் இவற்றைப் பொருத்தி சோதனையிடவுள்ளனர். இந்த ஏவுகணைகளை இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து தயாரித்துள்ளன என்பது நினைவிருக்கலாம். டிசம்பர் இறுதியில் முதல் பரிசோதனை நடைபெறவுள்ளது.

Comments