தூத்துக்குடி அனல் மின்நிலையத்தின் 5 வது யூனிட் பாதிப்பு - மின்வெட்டு மேலும் அதிகரிக்கிறது!

தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்திந் 5வது யூனிட் பழுதுபட்டதால், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் மேலும் மின்வெட்டு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்கள் உள்ளன. இதன்மூலம் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் சமீபகாலமாக அடிக்கடி பழுது ஏற்படுகிறது. இதனால் மின் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை 1-வது மற்றும் 4-வது யூனிட்டில் பழுது ஏற்பட்டது. அவற்றின் பாய்லர் டியூப் பஞ்சர் ஆனதால் அந்த 2 யூனிட்களிலும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. பலமணிநேர போராட்டத்துக்கு பிறகு முதலாவது யூனிட்டின் பழுது நேற்று காலை சரி செய்யப்பட்டது. இந்தநிலையில் 5-வது யூனிட்டில் நேற்று மாலை பழுது ஏற்பட்டது.
இதில் உள்ள ஏ3 பேன் வேலை செய்யாததால் மின் உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனை சரிசெய்ய ஓரிரு நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது. இதற்கான பணியில் பொறியாளர்கள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தற்போது 600 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மின்வெட்டு நேரம் மேலும் அதிகரித்துள்ளது.

Comments