40 தொகுதிகளையும் வெல்வோம், 'அம்மா'வை பிரதமராக்குவோம்.. எம்.ஜி.ஆர்.மன்றம் சபதம்

சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் வென்றெடுத்து முதல்வர் ஜெயலலிதாவை பிரதமர் பதவியில் அமர வைப்போம் என்று அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம் சபதம் செய்துள்ளது.
அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அதிமுக தலைமை கழகத்தில் நேற்று நடந்தது. அதில் மன்றச் செயலாளர் அ. தமிழ்மகன் அசேன் தலைமை தாங்கினார்.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், அமைப்பு செயலாளர்கள் சி.பொன்னையன், பி.எச்.பாண்டியன், விசாலாட்சி நெடுஞ்செழியன், ஈ.வெ.கி.சுலோசனா சம்பத், இலக்கிய அணி செயலாளரும், சமூகநலத்துறை அமைச்சருமான பா.வளர்மதி, மகளிரணி செயலாரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான எஸ்.கோகுல இந்திரா உள்பட பலர் பேசினார்கள்.
இறுதியில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
- எல்லா துறையிலும் திறமையற்ற நிர்வாகம் மூலம் மோசமான ஆட்சி நடத்தி வரும் காங்கிரஸ் அரசை தூக்கி எறிய, அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்றம் உறுதி கொள்வதுடன், எதற்கும் அஞ்சாத துணிச்சல் கொண்ட முதல்வர் ஜெயலலிதா, டெல்லி அரியணையில் அமரும் வகையில் 40 நாடாளுமன்ற தொகுதியிலும் வெற்றி பெற அயராது பாடுபட்டு அதிமுகவை வெற்றி பெறச் செய்வோம் என்று அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்றம் சபதம் ஏற்றுள்ளது.
- சமுதாயத்தின் அடித்தளத்தில் ஒடுக்கப்பட்ட இனமான 10 கோடி மலைவாழ் மக்களை இந்த நாடே நினைத்துப் பார்க்கின்ற வகையில், அதிலும் சிறுபான்மையின கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்த சங்மாவை குடியரசுத் தலைவர் தேர்தலில் நிற்க வைத்து, மலைவாழ் மக்களும், கிறிஸ்தவ மக்களும், அனைத்து சமூக மக்களும் என் உறவினர்களே என்பதை நாட்டிற்கு உணர்த்திய முதல்வர் ஜெயலலிதாவை அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்றம் வாழ்த்துகிறது.
- அரசின் சிறப்பு திட்டங்களை கிராமம் தோறும் கொண்டு செல்லும் வகையில் தெருமுனை பிரசாரம் செய்யப்படும்.
- தமிழக மக்களை ஏமாற்ற டெசோ மாநாடு நடத்திய கருணாநிதியையும், உச்சநீதிமன்ற தீர்ப்பினை அவமதிக்கும் வகையில், தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரை நிறுத்தி, காவிரியில் தமிழகத்திற்கு உரிய பங்கினை தர மறுக்கும் கர்நாடக அரசினையும், மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையினையும் கண்டித்தும் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Comments