'காவிரி': 4 ஜனதாதள எம்எல்ஏக்கள், 1 எம்.பி ராஜினாமா- பிரதமருடன் தேவ கெளடா சந்திப்பு

 Gowda Meets Pm On Cauvery Issue Will Jds Mla Resign டெல்லி: காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் விடுவதை எதிர்த்து தேவ கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த ஒரு எம்பி மற்றும் 4 எம்எல்ஏக்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை கட்சியின் மாநிலத் தலைவர் குமாரசாமியிடம் தந்துள்ளனர்.
உண்மையிலேயே இவர்கள் ராஜினாமா செய்வதாக இருந்தால் முறைப்படி அதை நாடாளுமன்ற சபாநாயகருக்கும், சட்டமன்ற சபாநாயகருக்கும் தான் அனுப்ப வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதா தளத் தலைவருமான தேவ கெளடா இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார்.
காவிரியில் தமிழகத்துக்கு 9,000 கன அடி நீரைத் திறந்துவிடுமாறு சமீபத்தில் காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டார். இதை கர்நாடகம் ஏற்க மறுத்தது.
இதையடுத்து தமிழகம் உச்ச நீதிமன்றத்தை நாடியது. தமிழகத்துக்கு உடனே 9,000 கன அடி நீரை 15 நாட்களுக்குத் திறந்துவிடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிட்டுள்ளது கர்நாடகம். ஆனால், 3 நாட்கள் மட்டுமே நீரை விடுவோம் என கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டார் கூறுகிறார்.
தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதை எதிர்த்து கர்நாடகத்தில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக மதசார்பற்ற ஜனதா தளம் வலுவாக உள்ள மாண்டியா, சாம்ராஜ்நகர், மைசூர் மாவட்டங்களில் தான் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூரில் கன்னட அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. 6ம் தேதி பந்த் நடத்தவும் அழைப்பு விடுத்துள்ளன. அதே நேரத்தில் கர்நாடகத்தில் வட மாவட்டங்களில் இந்த விஷயத்தில் எந்தப் போராட்டமும் நடக்கவில்லை.
இந் நிலையில், மாண்டியா, சாம்ராஜ் நகர், மைசூர், பெங்களூர் பகுதிகளில் தங்களது ஆதரவை நிலை நிறுத்த தேவெ கெளடா, பாஜக, காங்கிரஸ் ஆகியவை இந்தப் பிரச்சனை கையில் எடுத்துள்ளன.
தமிழகத்துக்கு தண்ணீரைத் திறந்துவிட்டு கர்நாடகத்துக்கு மாநில பாஜக அரசு துரோகம் செய்துவிட்டதாக காங்கிரஸ் கூறி வருகிறது. முதல்வரின் ராஜினாமாவையும் கோருகிறது.
இந்த விஷயத்தில் காங்கிரஸ் தனது ஓட்டு வங்கிக்குள் நுழைவதைத் தடுக்க தேவெ கெளடாவும் தனது வேலைகளை ஆரம்பித்துள்ளார்.
இன்று டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த அவர், கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பு, கர்நாடகத்துக்கு விவசாயத்துக்கு தேவைப்படும் நீர் ஆகியவை குறித்து விளக்கியதோடு, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு பிறப்பித்த உத்தரவை வாபஸ் பெறச் சொன்னதாகத் தெரிகிறது.
இந் நிலையில் பெங்களூரில் நிருபர்களிடம் பேசிய கெளடாவின் மகனும் கட்சியின் மாநிலத் தலைவருமான குமாரசாமி, தங்களது எதிர்ப்பைக் காட்டும் வகையில் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியின் எம்பி செலுவராயசாமி மற்றும் 4 எம்எல்ஏக்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை தன்னிடம் தந்துள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் நாளை கட்சியின் முக்கியக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாகவும், அதில் கட்சியின் அனைத்து எம்பி, எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்வது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் கூறினார்.

Comments