தமிழகத்தில் மழைக்குப் பலியானோர் எண்ணிக்கை 34!

சென்னை: தமிழகத்தில் கடந்த ஒருவார காலமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழைக்கு மொத்தம் 20 பேர் பலியாகி இருந்த நிலையில் மேலும் 14 பேர் உயிரிழந்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று அரசு வெளியிட்ட அறிக்கையில், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ2.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர் மழையால் சென்னை நகரில் சாலைகள் வெள்ளக்காடுகளாகிவிட்டன. இதனால் வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. திருவாரூர் மாவட்டத்தில் வயல்வெளிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் பயிர்கள் நாசமாகி உள்ளன.திருவாரூரில் பெய்த கனமழையால் பெரிய கோவில் எதிரே குளத்தின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மிகவும் பிரசித்தி பெற்ற கமலாலயம் குளத்தினை சுற்றிலும் சுவர் அமைந்துள்ளது. கனமழை காரணமாக வடகரையின் தடுப்பு சுவர் 50 அடி தூரத்திற்கு இடிந்து குளத்திற்குள் விழுந்தது. சாலையும் சேதம் அடைந்தது. இதனால் கும்பகோணம் திருவாரூர் இடையேயான போக்குவரத்து இந்த சாலை வழியாக செல்வது நிறுத்தப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. மழையினால் நெல்லை மாவட்டத்தின் அனைத்து அணைகளும் நிரம்பி வழிகின்றன. திண்டுக்கல் மாவட்டம் காமராஜர் நீர்தேக்கம் நிரம்பி வழிகிறது.

Comments