சேலத்திலிருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட 300 டன் ஆப்பிரிக்க வெடி மருந்து?

 Terror Targets Tn Kerala
சென்னை: தமிழகம் மற்றும் கேரளாவில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக மத்திய புலனாய்வுத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். கடந்த 2 மாதங்களில் தமிழகத்தின் சேலத்திலிருந்து கேரளாவுக்கு 300 டன் வெடிமருந்து கடத்தப்பட்டதை பறிமுதல் செய்ததைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள புலனாய்வுத்துறை அதிகாரிகள், கெரோசினில் கலந்து எடுத்துச் செல்லப்பட்ட அம்மோனியம் நைட்ரேட்டை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்துள்ளதாகவும் புனே பெஸ்ட் பேக்கரி குண்டுவெடிப்பில் இத்தகைய வெடிமருந்தே பயன்படுத்தப்பட்டதாகவும் சுட்டிக் காட்டுகின்றனர்.
அம்மோனியம் நைட்ரேட் குவாரிகளில் பயன்படுத்தப்பட்டாலும் கெரோசின் கலந்த அம்மோனியம் நைட்ரேட்டை பயங்கரவாதிகளே பயன்படுத்துவதாகவும் புலனாய்வுத்துறையினர் கூறுகின்றனர்.
ஆப்பிரிக்க வெடிமருந்து
இத்தகைய அம்மோனியம் நைட்ரேட் வெடிமருந்தானது,ஆப்பிரிக்காவிலிருந்து கடல் வழியே பாகிஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து தரைவழியே குஜராத் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்கள் வழியாக சேலத்துக்குக் கொண்டுவரப்படுகிறது என்று புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இப்படி தமிழகத்துக்கு கொண்டுவரப்படும் வெடிமருந்தை கேரளாவுக்கு கொண்டு செல்லும் லாரி டிரைவர்களுக்கு பெருந்தொகையான பணம் கொடுக்கப்படுகிறது என்றும் இதன் மூலம் செக்போஸ் மற்றும் காவல்துறையினருக்கு லஞ்சம் கொடுத்து அம்மோனியம் நைட்ரேட் கடத்தப்படுகிறது என்றும் விவரிக்கின்றனர் அந்த அதிகாரிகள்.
அமெரிக்க தூதரகத்துக்கு அன்சாரி குறி?
இதனிடையே பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட தமீம் அன்சாரியின் மற்றொரு சதித் திட்டம் பற்றி விசாரிக்கப்பட்டு வருவதாகவும் மத்திய புலனாய்வுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி படம் எடுத்த விவகாரத்தில் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்பாக போராட்டங்கள் நடத்தப்பட்ட போது அம்மோனியம் நைட்ரேட்டை பயன்படுத்தி தாக்குதல் நடத்த தமீம் அன்சாரி திட்டமிட்டிருந்ததாக கூறப்படுவது பற்றியும் விசாரணை நடத்துகின்றோம் என்கின்றனர் அந்த அதிகாரிகள்!

Comments