ஈரோடு: ஈரோட்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவன்
பரிதாபமாக உயிரிழந்தார். விருதுநகரில் 2 பேருக்கு டெங்கு காய்ச்சல்
பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல்
பீதி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தென் மாவட்டங்களில் அதிகளவில்
மக்கள், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில்
மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பை ஆங்காங்கே காண
முடிகிறது.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள அத்தாணி காலனி என்ற
பகுதியை சேர்ந்தவர் தவசியப்பன். இவரது மகன் செலம்பண்ணன்(9). அப்பகுதியில்
உள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக கடும்
காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த செலம்பண்ணன், மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டார்.
மருத்துவ பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல்
இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் மருந்துவமனையில் தனி வார்டில்
சிகிச்சை பெற்று வந்த செலம்பண்ணன், நேற்று சிகிச்சை பலனின்றி பலியானார்.
அதேபோல
ஈரோடு என்.எம்.எஸ். காம்பவுண்டு பகுதியை சேர்ந்த சீதா என்பவருக்கு டெங்கு
காய்ச்சல் தாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சீதா, தனியார்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சீதா உட்பட ஈரோடு
மாவட்டத்தில் மட்டும் 10 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை
அளிக்கப்பட்டு வருகிறது.
விருதுநகரில் பாதிப்பு:
விருதுநகர்
மாவட்டம் செங்குன்றபுரத்தை சேர்ந்த ஜெயசீலன் மகள் மகாலட்சுமி(11) மற்றும்
குந்தலப்பட்டியை சேர்ந்த முனியசாமி மகன் குப்புசாமி(1) ஆகியோர் கடும்
காய்ச்சலால் அவதிப்பட்டனர். விருதுநகர் அரசு மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டுள்ள இருவருக்கும், பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் இருப்பது
தெரியவந்துள்ளது.
டெங்கு காய்ச்சல் பீதி காரணமாக தமிழகத்தில்
காய்ச்சலால் அவதிப்படுவோர், மருத்துவமனைகளில் பரிசோதனை மற்றும்
சிகிச்சைக்காக குவிந்து வருகின்றனர்.
Comments