நார்வே
நாட்டைச் சேர்ந்த டெலிநார் தொலைத் தொடர்பு நிறுவனமும், இந்தியாவின்
ரியல் எஸ்டேட் நிறுவனமான யூனிடெக்கின் துணை நிறுவனமான யூனிடெக் வயர்லெஸ்
ஆகியவை இணைந்து யூனிநார் நிறுவனத்தைத் துவக்கின.
இந்த நிறுவனம்
இந்தியாவில் யூனிநார் என்ற பெயரில் செல்போன் சேவையைத் தொடங்கின. இந்
நிலையில் 2ஜி ஊழல் விவகாரம் வெடித்தது. இந்த நிறுவனம்
முறைகேடான வழியில்
2ஜி லைசென்ஸ் பெற்றதும் தெரியவந்தது.
ஆனால், இந்த மோசடிக்கு
யூனிடெக் வயர்லெஸ் மட்டுமே பொறுப்பு என்றும், தாங்கள் லைசென்ஸ் பெறும்
நடவடிக்கைகள் எதிலும் நேரடியாக ஈடுபடவே இல்லை என்றும் டெலிநார் கூறி
வந்தது.
இதற்கிடையே இந்த நிறுவனம் உள்பட 9 நிறுவனங்களுக்கு 122 மண்டலங்களில் தரப்பட்டிருந்த 2ஜி ஸ்பெக்ட்ரம்
லைசென்ஸை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதனால், இந்தியாவில் எல்லா
இடத்திலும் லைசென்ஸ் இழந்துவிட்ட யூனிநார் நிறுவனம் மூடப்படும் நிலைக்குத்
தள்ளப்பட்டது.
இந் நிலையில் யூனிநார் நிறுவனத்திலிருந்து
டெலிநார் விலகிக் கொண்டுள்ளது. முன்னதாக, டெலிநார் ஈசியாக வெளியே
சென்றுவிட முடியாது, அதை தடுப்போம் என்று யூனிடெக் கூறி வந்தது.
ஆனால்,
தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளையடுத்து யூனிநாரில் இருந்த தனது
32.75 சதவீத பங்குகளையும் டெலிநார் வாங்கிக் கொண்டுவிட்டது. இதையடுத்து
செல்போன் சேவைகளில் இருந்தும் விலகுவதாக யூனிடெக் அறிவித்துள்ளது.
இதைத்
தொடர்ந்து அடுத்து இந்தியாவில் ஏலம் விடப்பட்டுள்ள 2ஜி லைசென்ஸ்களைப்
பெறும் போட்டியில் இறங்கப் போவதாக டெலிநார் அறிவித்துள்ளது. முன்னதாக
இதுவரை செலவு செய்துவிட்ட பல்லாயிரம் கோடிகள் போனாலும் பரவாயில்லை,
இந்தியாவில் தொலைத் தொடர்பு சேவையில் இருந்தே மொத்தமாக வெளியேறப்
போவதாகவும் டெலிநார் கூறி வந்தது.
இப்போது யூனிடெக்கை கழற்றி
விட்டுவிட்டு இந்திய செல்போன் துறையில் கால் பதிக்க டெலிநார் முடிவு
செய்துள்ளது. இதற்காக வேறு ஒரு இந்திய நிறுவனத்துடன் டெலிநார் இணைந்து,
புதிய தொலைத் தொடர்பு நிறுவனத்தைத் துவக்கியாக வேண்டும்.
இந்திய
தொலைத் தொடர்புத்துறை விதிகளின்படி வெளிநாட்டு நிறுவனங்கள் தொலைத்
தொடர்பு நிறுவனத்தை ஆரம்பித்தால், அதிகபட்சம் 74 சதவீதம் மட்டுமே முதலீடு
செய்ய முடியும். மிச்சமுள்ள 26 சதவீதத்தை இந்தியாவைச் சேர்ந்த நிறுவனமே
முதலீடு செய்ய வேண்டும்.
யூனிடெக் நிறுவனத்துக்கு இப்போது டெலிநார்
எவ்வளவு பணத்தைத் தந்து கழற்றிவிட்டது என்பது தெரியவில்லை. அதை இரு
நிறுவனங்களும் தெரிவிக்கவில்லை.
Comments