28 பேரும் ஓடிப்போனாலும் 'சிங்கிளா' நின்று சமாளிப்பேன்: விஜயகாந்த்

 Vijayakanth Downplays Dmdk Mlas Meet With Jayalalitha மதுரை: தேமுதிக எம்.எல்.ஏக்களை தம்மை சந்திக்க வைத்து முதல்வர் ஜெயலலிதா நடத்தி வரும் நாடகத்துக்கு தாம் முடிவு கட்டுவேன் என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் சவால் விட்டிருக்கிறார்.
சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை ஒருமையில் திட்டி, நாயே என்றெல்லாம் வசைபாடிவிட்டு அதே ஜோரில் மதுரை கோரிப்பாளையத்தில் நடைபெற்ற பக்ரீத் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜயகாந்த் பேசியதாவது:

நான் பேசியதில் என்ன தவறு?
சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களுடன் நடந்த பிரச்சினையை சில தொலைக்காட்சிகள் மீண்டும், மீண்டும் ஒளிபரப்புகின்றன. எனக்கு சினிமாவிற்கு வந்த காலம் முதல் பத்திரிகையாளர்களையும், தொலைக்காட்சி நிருபர்களையும் நன்கு தெரியும். ஒருவர் தன்னை நிருபர் என்று கூறிக்கொண்டு எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதாவை சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பினார். நாட்டிற்கு அதுவா பெரிய பிரச்சினை. டெங்கு, மின்தடை என்று எத்தனையோ பிரச்சினைகள் பொதுமக்களுக்கு உள்ளன. அதுகுறித்து கேளுங்கள் பதில் சொல்கிறேன் என்று கூறினேன். இது ஒரு தவறா?
ஜெ.வின் நாடகத்தை நான் முடிப்பேன்
என் கட்சிக்காரர்கள் ஓடியது பற்றி நான் கவலைப்படவில்லை. 28 பேரும் ஓடினாலும் பரவாயில்லை. நான் தனி ஆளாக நின்று சமாளிப்பேன்.
நான் கடந்த திமுக ஆட்சியில் ஒத்த ஆளாக நின்று சமாளித்தவன். இன்று 29 எம்.எல்.ஏக்களை கையில் வைத்திருக்கிறேன். பண பலத்தால் என் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குகிறார்கள். என் தொண்டர்களை விலைக்கு வாங்குகிறார்கள். என் கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் அளவுக்கு என் கட்சி வளர்ந்திருக்கிறது. ஆளுங்கட்சிக்கு திறமையில்லை. திரும்பவும் சொல்கிறேன். நான் மக்களையும், கடவுளையும்தான் நம்புகிறேன்.
போயஸ் வீட்டிற்கு முதலில் என் கட்சி எம்.எல்.ஏக்களை வரவழைத்து, பின்னர், தொகுதி சம்பந்தமாக சந்திப்பது போல் செய்துவிடலாம் என்று கோட்டைக்கு சந்திப்பை மாற்றியுள்ளனர். இந்த நாடகத்தை விரைவில் நானே முடித்துவைப்பேன்''
ஜெயலலிதாவை என் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து இருப்பது ஒரு நாடகம். அதை ஜெயலலிதா தொடங்கி வைத்துள்ளார். ஆனால் எப்படி முடிக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும். இதனை பார்க்கும்போது தே.மு.தி.க. வளர்ந்துள்ளது என்று தெரிகிறது. நம்மைப் பார்த்து அவர்களுக்கு பயம் வந்துள்ளது. அது சந்தோஷம் அளிக்கிறது.
அதிமுகவுக்கு ஓட்டுப் போடாதீங்க..

மின்சாரமே இல்லாத மாநிலத்தில் மின்விசிறி, மிக்சி, கிரைண்டர், லேப்-டாப் என்று இலவசமாக வழங்குகிறார்கள். அத்துடன் ஆடு, மாடுகளும். இதையா உங்களிடம் மக்கள் கேட்டார்கள்.யாரும் தவறு செய்தால் எனக்கு கோபம் வரும். ஆனால் கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும். மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம். எனக்கு எந்த பயமும் இல்லை. தமிழகத்தில் மக்கள் நினைத்தால் வெளிச்சம் வரும். அடுத்த தேர்தலின்போதாவது அ.தி.மு.க., தி.மு.க.வை தேர்வு செய்யாமல் இருங்கள். நல்லது நடக்கும் என்றார் அவர்.

Comments