சென்னை
வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், இலங்கைக்கும்
தமிழகத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றாழுத்த தாழ்வு
நிலை மேற்கு நோக்கி நகர்ந்து உள்ளது. இதனால் குமரி கடல் முதல் ஆந்திரா வரை
இதன் தாக்கம் இருக்கும். தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் அடுத்த
24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யலாம் என்று அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில்
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 26 செ.மீட்டர் மழையும் தூத்துக்குடி
மாவட்டம் திருச்செந்தூரில் 20 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
நீண்டநாட்களால வெயிலில் வாடி வதங்கிய சென்னை நகரம் கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடைமழையால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
மழைக்கு பலி- நிதி உதவி
இதனிடையே
தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 20 பேர்
பலியாகியுள்ளனர். மழையால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ2.50 லட்சம்
உதவித் தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
முதல்வர்
ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், பெருமழைக்கு இதுவரை 38 குடிசை வீடுகள்
முழுமையாகவும், 123 குடிசை வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. முழுமையாக
சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு நிவாரணத்தொகையாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கவும்,
பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணத்தொகையாக 2,500 ரூபாய் வழங்கவும் நான்
உத்தரவிட்டுள்ளேன்.
இது தவிர, முழுமையாக வீடுகளை இழந்த
குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, ஒரு சேலை மற்றும் ஒரு லிட்டர்
மண்ணெண்ணெய் வழங்கவும் நான் ஆணையிட்டுள்ளேன். இந்த பெருமழைக்கு இதுவரை 112
கால்நடைகள் பலியாகியுள்ளன. மாடுகளை இழந்த உரிமையாளர்களுக்கு ரூ.20
ஆயிரமும், ஆடுகளை இழந்தவர்களுக்கு ரூ.2 ஆயிரமும், கோழிகளை இழந்தவர்களுக்கு
ரூ.100-ம் நிவாரணத்தொகையாக வழங்க நான் ஆணையிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.
Comments