சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி
கொடுத்ததால் மத்திய அரசுக்கான ஆதரவை திரிணாமுல் காங்கிரஸ் விலக்கிக்
கொண்டது.
மற்றொரு கூட்டணிக் கட்சியான திமுகவோ, இந்த விவகாரத்தில்
நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தால் ஆதரிப்போம்
என்று அறிவித்திருக்கிறது. அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும்
சமாஜ்வாதி கட்சியும் எதிர்ப்பு நிலையைத்தான் வெளிப்படுத்தியிருக்கிறது.
இந்த
நிலையில் மத்திய அரசை ஆதரிக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும்
ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா ஆகிய இரண்டு கட்சிகளும் ஆதரவை விலக்கிக்
கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்து வருகின்றன. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா,
மத்தியில் காங்கிரசையும் மாநிலத்தில் பாஜகவையும் ஆதரிக்கிறது.
அக்கட்சியின் தலைவர் சிபுசோரன் இது குறித்து கூறுகையில், சில்லரை
வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி என்பது ஏற்க முடியாதது. பல
லட்சக்கணக்கானோர் வேலையிழக்கும் நிலை உருவாகும். அனைத்து மளிகைக் கடைகளும்
மூடப்பட்டு சங்கிலித் தொடர் கடைகளையே நாட வேண்டியிருக்கும். மத்திய அரசின்
இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இந்த விவகாரத்தில்
அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொள்ளவும் தயங்கமாட்டோம் என்றார் அவர்.
ஜார்க்கண்ட்
விகாஸ் மோர்ச்சாவின் தலைவர் பாபுலால் மராண்டி கூறுகையில், சில்லரை
வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கான ஆதரவு என்பது ஏற்க முடியாதது என்றார்.
அரசுக்கான
ஆதரவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெற்ற போதே மன்மோகன்சிங் அரசு
மைனாரிட்டி அரசாகிப் போய்விட்டது. இந்த இரண்டு கட்சிகளின் சார்பில் உள்ள
மொத்தம் 4 எம்.பிக்கள் உள்ளனர். இந்த இரண்டு கட்சிகளும் ஆதரவை திரும்பப்
பெற்றால் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடிதான்.
Comments