காவிரி நீர் வழக்கு விசாரணை அக்டோபர் 19-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

 Cauvery Row Sc Hear Tamil Nadu Contempt Plea டெல்லி: தமிழகத்துக்கு காவிரியில் தினமும் 9,000 கன அடி நீர் வழங்க வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி கர்நாடக அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனு மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு வழங்கப்பட்டு வந்த காவிரி நீரை தன்னிச்சையாக நிறுத்தியதற்காக கர்நாடக முதல்வர் உள்பட 7 பேருக்கு எதிராக தமிழகம் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் மீதான விசாரணை வரும் 19-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

காவிரி நதி நீர் தொடர்பான வழக்கு அக்டோபர் 8ம் தேதி விசாரணக்கு வந்தபோது, தமிழகத்துக்கு அக்டோபர் 15ம் தேதி வரை தினமும் 9,000 கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என்று பிரதமர் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையம் பிறப்பித்த உத்தரவை அவர் மட்டும் மறுபரிசீலனை செய்யலாம் என்றும், அதற்கு கடந்த உச்ச நீதிமன்றம் தடையாக இருக்காது என்றும் நீதிபதிகள் கூறியிருந்தனர்.
ஆனால் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் மீறி, தமிழகத்துக்கு திறந்து விடப்பட்ட நீரை அக்டோபர் 8ம் தேதி கர்நாடகம் நிறுத்தியது. இதை நீதிமன்ற அவமதிப்புச் செயலாகக் கருதி கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், அந்த மாநில நீர் வளத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, அதிகாரிகள் உள்பட 7 பேர் மீது தமிழக அரசு கடந்த வியாழக்கிழமை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
கர்நாடக மறு சீராய்வு மனு மீது நடவடிக்கை தேவை: அமைச்சர் பசவராஜ் பொம்மை
இந் நிலையில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் பவன்குமார் பன்சாலுக்கு கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை ஒரு விரிவான கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று பிரதமர் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யவும், அதுவரை அந்த உத்தரவைத் தள்ளி வைக்கவும் கோரும் மறுசீராய்வு மனு காவிரி நதி நீர் ஆணையத்தின் முன் நிலுவையில் உள்ளது.
பிலிகுண்டலுவில் தினமும் வினாடிக்கு 9,000 கன அடி தண்ணீர் வழங்க வேண்டும் என்ற காவிரி நதி நீர் ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்தியுள்ளது.
மறுசீராய்வு மனு செப்டம்பர் 20ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பிறகு, 3 நினைவூட்டல் கடிதங்களும் எழுதப்பட்டுள்ளன. எனினும், மறுசீராய்வு மனு மீது பிரதமர் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள சட்ட விதிகளின்படி, தனது முடிவை மறுபரிசீலனை செய்யும் அதிகாரம் காவிரி நதி நீர் ஆணையத் தலைவருக்கு (பிரதமருக்கு) உள்ளது.
எனவே, இந்த விவகாரத்தை காவிரி நதி நீர் ஆணைய உறுப்பினர் மற்றும் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் என்ற முறையில் நீங்கள் பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு சென்று, கர்நாடகம், தமிழ்நாடு தாக்கல் செய்துள்ள இடைக்கால மனுக்கள் அக்டோபர் 12ம் தேதி (இன்று) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருப்பதால், அதற்குள் நாங்கள் தாக்கல் செய்துள்ள மறுசீராய்வு மனு மீது முடிவெடுக்குமாறு அறிவுறுத்த வேண்டும் என்று அக்கடிதத்தில் அமைச்சர் பசவராஜ் பொம்மை கோரியுள்ளார்.
தமிழகத்துக்கு 8.85 டிஎம்சி நீர் தரவும் கர்நாடகம் மறுப்பு:
இந் நிலையில் காவிரியிலிருந்து தமிழகத்துக்கு அக்டோபர் 16ம் தேதி முதல் 31ம் தேதி வரை 8.85 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று நேற்று காவிரி கண்காணிப்புக் குழு பிறப்பித்த உத்தரவையும் ஏற்க கர்நாடகம் மறுத்துவிட்டது.
முன்னதாக பிரதமர் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையம் பிறப்பித்த உத்தரவையும், பின்னர் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் ஏற்க கர்நாடகம் மறுத்தது. இப்போது கண்காணிப்புக் குழுவின் உத்தரவையும் நிராகரித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் விசாரணை
இந்நிலையில் தமிழக அரசு மற்றும் கர்நாடகம் தாக்கல் செய்த மனுக்கள் இன்று உச்சநீமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர், தமிழகத்துக்கு இன்னும் 4 நாட்களில் 4 டி.எம்.சி. நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்று சுட்டிக்காட்டியதுடன் காவிரி கண்காணிப்புக் குழுவும் தமிழகத்துக்கு 8.85 டி.எம்.சி. நீர் திறந்துவிட உத்தரவிட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். மேலும் காவிரி கண்காணிப்புக் குழுவின் உத்தரவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதேபோல் நடுவர் மன்றத் தீர்ப்பை மீறி அளவுக்கு அதிகமான நீரை வறட்சிக் காலத்தில் கர்நாடகம் பயன்படுத்துவதாகவும் தமிழக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

இதேபோல் கர்நாடகத் தரப்பிலும் வாதிடப்பட்டது. தமிழ்நாட்டுக்கு கூடுதலாக நீர் திறந்துவிடப்பட்டதாக கர்நாடகத்தின் தரப்பின் வழக்கறிஞர் நாரிமண் கூறினார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய நீதிபதிகள், கர்நாடகத்திலிருந்து ஒவ்வொரு நாளும் வெவ்வேறான அளவுகளில் ஏன் நீர் திறந்துவிடப்படுகிறது? என்று கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞரிடம் கேட்டனர். பின்னர் காவிரி கண்காணிப்புக் குழுவின் உத்தரவைத் தாக்கல் செய்ய தமிழகத்துக்கு அனுமதி வழங்கிய நீதிபதிகள் வழக்கின் விசாரணையை வரும் 19-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
விவசாயிகள் மனு தள்ளுபடி
முன்னதாக தமிழகத்திற்கு கர்நாடகம் நீர் விட வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் உள்ளிட்ட 3 பேர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. காவிரி நீர் பிரச்சனை மாநிலம் தழுவிய விவகாரம் எனவும், மாநிலப் பிரச்சனையில் சம்பந்தப்பட்ட அரசு தான் வழக்கு தொடர முடியும் என்றும், தனி நபர் மனுவை ஏற்க முடியாது என கூறி அந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பிரதமர் நிராகரிப்பு
இதேபோல் தமிழகத்துக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிட வேண்டும் என்ற காவிர் நதிநீர் ஆணையத்தின் உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரிகர்நாடக அரசு விடுத்திருந்த கோரிக்கையை பிரதமர் மன்மோகன்சிங் இன்று நிராகரித்திருக்கிறார்.

Comments