சோனியா செலவுக்கு ரூ. 1880 கோடியா?.. மோடிக்கு காங். கண்டனம், ஆனால் விளக்கம் தர மறுப்பு!

 Sonia Foreign Trip Modi Is Lying Says Congress டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வெளிநாட்டுப் பயணம், மருத்துவ செலவுக்கு ரூ. 1880 கோடி செலவிடப்பட்டுள்ளதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியிருப்பதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இது உண்மையா இல்லையா என்பதை விளக்க அது மறுத்து விட்டது.
குஜராத்தில் சட்டசபைத் தேர்தல் வரவுள்ளது. இதற்கான பிரசாரத்தை இப்போதே
ஆரம்பித்து விட்டார் மோடி. இந்த நிலையில் ராஜ்கோட்டில் நடந்த பிரசாரத்தின்போது அவர் பேசுகையில், சோனியா காந்தியின் மருத்துவச் செலவு, இதற்காக அவர் வெளிநாடுகளுக்குப் போனது ஆகியவற்றுக்காக இதுவரை ரூ. 1880 கோடி பணம் செலவிடப்பட்டுள்ளதாக ஆர்டிஐ தகவல் ஒன்று தெரிவிக்கிறது. இதை குஜராத்தி நாளிதழ் ஒன்றும் வெளியிட்டுள்ளது. இது உண்மையா என்பதை காங்கிரஸ் விளக்க வேண்டும். மேலும் இந்தச் செலவை செய்தது யார் என்பதையும் அது சொல்ல வேண்டும் என்று கூறியிருந்தார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோடியின் பேச்சு அவரை ஒரு மன நோயாளி என்றுதான் காட்டுகிறது என்று காங்கிரஸ் தரப்பில் பதிலடி வந்தது. இருப்பினும் யாரும், மோடியின் பேச்சு தவறு என்றும், சோனியா காந்திக்காக செலவிடப்பட்ட தொகை எவ்வளவு என்பதையும் விளக்க முன்வரவில்லை.
அதேசமயம், இந்த ஆர்டிஐ தகவலைப் பெற்ற ஹரியானாவைச் சேர்ந்த சர்மாவும், மோடி சொல்வது எனக்குப் புரியவில்லை என்று மறுத்திருந்தார். இருப்பினும் மோடி தனது குற்றச்சாட்டிலிருந்து பின்வாங்கவில்லை. தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். நான் சொல்வது பொய் என்பதை காங்கிரஸ் கட்சி நிரூபித்தால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கத் தயார் என்றும் அவர் அதிரடியாக பேசி வருகிறார். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதல் முறையாக காங்கிரஸ் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக இதுகுறித்து கருத்து வெளியாகியுள்ளது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி இதுகுறித்து கூறுகையில், இது சுத்தமான பொய். குறுகிய உள்நோக்கத்துடன் மோடி இப்படிப் பேசியுள்ளதாக கருதுகிறோம். மோடி பொதுமக்கள் மத்தியில் கூறியுள்ள குற்றச்சாட்டுக்களில் எள்ளளவும் உண்மை இல்லை. அனைத்துமே பொய்யானவை என்றார்.
சரி சோனியா காந்திக்கு உண்மையிலேயே எவ்வளவு செலவானது, அதை யார் செலுத்தியது என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு திவாரி பதிலளிக்க மறுத்து விட்டார். அதுகுறித்து விளக்கம் அளிக்கவும் அவர் முன்வரவில்லை.
இன்று பதிலளிப்பாரா சோனியா?
இதற்கிடையே அதே ராஜ்கோட்டில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரசாரம் செய்யவுள்ளார். அப்போது அவர் மோடியின் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Comments