சோனியாவுக்கு ரூ. 1880 கோடி செலவா? -மோடி சொல்வது சரியல்ல என்கிறார் ஆர்டிஐ சேவகர்

 Rti Activist Questions Modi Claim About Money Spent டெல்லி: சோனியா காந்தியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக ரூ. 1880 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியிருப்பது சரியல்ல என்று ஆர்டிஐ சேவகர் ரமேஷ் வர்மா மறுத்துள்ளார்.
இவரது ஆர்டிஐ தகவலை மேற்கோள் காட்டித்தான் மோடி குற்றம் சாட்டியுள்ளார் என்பதால் இது திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் ஹிஸ்ஸாரைச் சேர்ந்தவர் வர்மா. சோனியா காந்தியின்
வெளிநாட்டுப் பயணச் செலவுகள் எவ்வளவு, அதை செலுத்துவது யார் என்பது குறித்த விவரங்களை இவர் கேட்டிருந்தார். இதுதொடர்பாக ஒரு குஜராத் இதழ் செய்தி வெளியிட்டிருந்தது. அதை மேற்கோள் காட்டி ராஜ்கோட்டில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, சோனியா காந்தியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு ரூ. 1880 கோடி செலவிடப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.
தனது இந்தக் குற்றச்சாட்டு பொய் என்று காங்கிரஸ் கட்சி நிரூபித்தால் நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கத் தயார் என்றும் அவர் சவால் விட்டுள்ளார்.
இந்த நிலையில் வர்மா இதுகுறித்துக் கருத்து தெரிவிக்கையில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியிருப்பது ஆச்சரியம் தருகிறது. அவர் எதை அடிப்படையாக வைத்து இந்தப் புகாரைக் கூறியுள்ளார் என்பது தெரியவில்லை.
அவர் கூறுவது மிகப் பெரிய தொகை. நான் கேட்ட ஆர்டிஐ தகவலுக்கு இதுவரை மத்திய அரசு பதில் தரவில்லை. எவ்வளவு பணம் செலவானது என்பதை மத்திய அரசு இதுவரை எனக்குத் தெரிவிக்கவில்லை. ஆனால் மோடி ரூ.1880 கோடி செலவிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அவருக்கு எங்கிருந்து இந்தத் தகவல் கிடைத்தது என்பது தெரியவில்லை.
சோனியா காந்தியின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பாக நான் கோரியிருந்த ஆர்ஐடி கேள்விக்கு இதுவரை எனக்குப் பதில் வரவில்லை. மேலும் ரூ. 1880 கோடி செலவிடப்பட்டதாகவும் எனக்குத் தகவல் வரவில்லை. மேலும் நான் மோடியை இதுவரை தொடர்பு கொண்டதில்லை. அவரிடம் எந்தத் தகவலையும் நான் பரிமாறிக் கொண்டதில்லை.
எனக்கு இதுவரை ரூ. 80 முதல் 85 லட்சம் வரையிலான சோனியா காந்தியின் வெளிநாட்டுப் பயணச் செலவுக் கணக்கு மட்டுமே பதிலாக வந்துள்ளது. இது வெளியுறவுத்துறை அமைச்சகம், தூதர்களின் அலுவலங்களிடமிருந்து பெறப்பட்ட தகவலாகும் என்றார் அவர்.

Comments