கை-கால் செயலிழந்து 16 ஆண்டுகளாக படுக்கையில் கிடக்கும் மாற்றுதிறனாளியை மணந்த பெண்!

குமரி: சிறுவயதில் நோய் தாக்கி கை, கால்கள் செயலிழந்த நிலையில் கடந்த 16 ஆண்டுகளாக படுக்கையில் கிடக்கும் மாற்றுத்திறனாளி ஒருவரை வாழ்க்கை துணையாக ஏற்றுள்ளார் இளம்பெண். தனது கணவனையும், அவரது குடும்பத்தையும் பொறுப்புடன் கவனித்து கொள்ள உள்ளதாக இளம்பெண் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
குமரி மாவட்டம் பள்ளியாடி சேரிக்கடை பகுதியை சேர்ந்த ஜார்ஜ் வில்லியம். இவரது மனைவி அன்னம்மாள். இவர்களுக்கு இரட்டையர்களான விஜய்குமார்(26), ஜெய்குமார்(26) என்ற இரு மகன்கள் உள்ளனர்.

சிறுவயதில் மற்ற குழந்தைகளை போல ஓடியாடி வந்த இருவருக்கும், கடந்த 1996ம் ஆண்டு ஒரு நோய் தாக்கியது. இதில் இருவருக்கும் கை, கால்கள் செயலிழந்து, படுத்த படுக்கையானார்கள்.
இதனால் கடந்த 16 ஆண்டுகளாக மற்றவர்களின் உதவியில்லாமல் இவர்களால் எந்த வேலையும் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கேரள மாநிலம் பந்தளம் பகுதியை சேர்ந்த உத்தமன் என்பவர் தனது குடும்பத்துடன், ஜார்ஜ் வில்லியம் வீட்டிற்கு அருகே குடியேறினார்.
பக்கத்து வீட்டில் வசித்து வந்த இரட்டை சகோதர்களின் நிலையை அறிந்த, உத்தமனின் மகள் மஞ்சுஷா(19), அடிக்கடி அவர்களிடம் சென்று ஆறுதல் கூறி வந்தார். அப்போது விஜயகுமாருக்கு, மஞ்சுஷாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
துவக்கத்தில் இரு வீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், அதன்பிறகு திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து விஜயகுமாரின் வீட்டில் நேற்று இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. படுக்கையில் படுத்த நிலையில் விஜயக்குமார், மஞ்சுஷாவுக்கு தாலி கட்டினார். திருமணத்திற்கு வந்திறந்த பொதுமக்களும், உறவினர்களும் மணமக்களை வாழ்த்தினர்.
இது குறித்து மணமகள் மஞ்சுஷா கூறியதாவது,
நான் 9ம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் போது, விஜயக்குமாரின் வீட்டிற்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவரை கண்ட நான், வாழ்நாள் முழுவதும் அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தேன்.
அதன்பிறகு தொடர்ந்து அவரது வீட்டிற்கு சென்ற போது, எங்களின் நட்பு அதிகரித்து, காதலாக மாறியது. தற்போது எங்களின் திருமணமும் முடிந்தது. விஜயக்குமாரை நான் ஒரு சாதாரண மனிதராகவே நினைக்கிறேன். இனிமேல் அவரையும், அவரது குடும்பத்தினரையும் நான் பொறுப்பாக பார்த்து கொள்வேன் என்றார்.
மாற்றுத்திறனாளி ஒருவரை மணந்து அவருக்கு உதவ முன்வந்த மஞ்சுஷாவை, திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் பாராட்டினர்.

Comments