துரை தயாநிதி, பி.ஆர்.பி உள்ளிட்ட 12 பேரின் ரூ.20,000 கோடி சொத்துக்களை முடக்க அரசு திட்டம்?

 Police May Attach The Assets Durai Dayanidhi
மதுரை: கிரானைட் மோசடி வழக்கில் சிக்கியுள்ள பி.ஆர்.பழனிச்சாமி, மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி உள்ளிட்ட 12 பேருக்குச் சொந்தமான ரூ. 20,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்க திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
பி.ஆர்.பி கிரானைட்ஸ் நிறுவன அதிபர் பழனிச்சாமிதான் கிரானைட் முறைகேடு வழக்கின் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மீது மட்டும் இதுவரை 24 வழக்குகளைப்
போலீஸார் போட்டுள்ளனர். துரை தயாநிதி கைதாகாமல் தலைமறைவாக இருந்து வருகிறார்.
பி.ஆர்.பி.யின் மகன்கள் சுரேஷ்குமார், செந்தில்குமார், சிந்து கிரானைட் அதிபர் செல்வராஜ், ஒலிம்பஸ் கிரானைட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களான துரை தயாநிதி, நாகராஜ் ஆகியோரும் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். மொத்தம் 40 பேர் தலைமறைவாக உள்ளனர்.
இவர்களைக் கண்டுபிடிக்க போலீஸார் திணறி வருகின்றனர். மொத்தம் 12 தனிப்படைகளை அமைத்து தீவிராக தேடி வருகின்றனர்.
தற்போது அடுத்த கட்டமாக சொத்து முடக்க நடவடிக்கை குறித்து போலீஸார் திட்டமிட்டு வருகின்றனராம். இதில் பிஆர்பிக்குத்தான் பெருமளவில் சொத்துக்கள் உள்ளதாம். அவருக்கு மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 24 ஆயிரம் ஏக்கர் சொத்துக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.6 ஆயிரம் கோடி என்றும் விசாரணை அதிகாரிகள் மதிப்பீடு செய்துள்ளனர். மேலும் பஸ்கள், டேங்கர் லாரிகள் உள்ளிட்ட மற்ற தொழில்களில் ரூ.4 ஆயிரம் கோடி வரை பி.ஆர்.பழனிச்சாமி முதலீடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மற்ற கிரானைட் நிறுவனங்களான பி.எஸ். கிரானைட் நிறுவனத்திற்கு 6 ஆயிரம் ஏக்கர் நிலமும், மதுரா கிரானைட் நிறுவனத்திற்கு 3600 ஏக்கர் நிலமும், சிந்து கிரானைட் நிறுவனத்திற்கு 800 ஏக்கர் சொத்துக்களும்
மேலும் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதி பெயரில் 1500 ஏக்கர் சொத்துக்கள் இருப்பதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும், இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர்.
அரசின் உத்தரவு கிடைத்ததும் இந்த சொத்துக்கள் அனைத்தையும் முடக்க காவல்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே பல்வேறு கிரானைட் நிறுவன அதிபர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அடுத்து சொத்துக்களும் முடக்கப்படப் போவதால் பரபரப்பு கூடியுள்ளது.

Comments