தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் டி. ஜெயக்குமார் திடீர் ராஜினமா

 Tn Speaker D Jayakumar Resign சென்னை: தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் பதவியிலிருந்து டி.ஜெயககுமார் திடீர் ராஜினாமா செய்துள்ளார்.
சபாநாயகர் ஜெயககுமார் ராஜினாமா செய்திருப்பதால் அவரது பணிகளை துணை சபாநாயகர் ப. தனபால் கவனிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய அதிமுக அரசுகளில் அமைச்சராக பொறுப்பு வகித்திருந்த ஜெயக்குமார், கடந்த ஆண்டு மே மாதம்
அதிமுக ஆட்சி பொறுப்பேற்றபோது சபாநாயகராக்கப்பட்டார்.
இந் நிலையில் இன்று காலை ஜெயக்குமார் தனது சபாநாயகர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை அவர் துணை சபாநாயகர் தனபாலிடம் கொடுத்தார்.
இதையடுத்து ஜெயக்குமாரின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஜெயக்குமார் ராஜினாமா தொடர்பாக தமிழக சட்டசபை செயலாளர் ஏ.எம்.பி. ஜமாலுதீன் ஒரு அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழக சட்டசபை சபாநாயகர் த.ஜெயக்குமார் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 179 (பி) பிரிவின்கீழ் 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ம் தேதி காலை தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் பதவி காலியானதால், அரசியலமைப்புச் சட்டம் 180(1)வது பிரிவின் கீழ் சபாநாயகர் அலுவலக பணிகளை இனி துணை சபாநாயகர் ப.தனபால் கவனிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், சபாநாயகர் பதவியில் இருந்து அவர் விலகியிருப்பதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
கடந்த செப்டம்பர் 18ம் தேதியன்றுதான் தமது 52-வது பிறந்தநாள் விழாவை அமர்க்களமாகக் கொண்டாடியிருந்தார் ஜெயக்குமார்.
தமிழக சட்டப்பேரவையின் வைரவிழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அவர் செய்து வந்தார். இந் நிலையில் சபாநாயகர் பதவியிலிருந்து அவர் ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயக்குமாரின் ராஜினாமா இன்றே உடனடியாக தமிழக அரசிதழிலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Comments