மதுரையில் அழகிரி, ஸ்டாலின்
ஆதரவாளர்களிடையிலான மோதல் நாளுக்கு நாள் உச்சத்தைத் தொட்டு வருகிறது.
சமீ்பத்தில் கூட இரு தரப்பும் பொதுமக்கள் மத்தியில் பொது இடத்தில் வைத்து
அடித்துக் கொண்டனர்.
இதையடுத்து மதுரை நகர் மாவட்ட திமுக நிர்வாகிகளை
அதாவது இரு கோஷ்டிகளையும் சேர்ந்தவர்களை சென்னைக்கு அழைத்திருந்தார் திமுக
தலைவர் கருணாநிதி.
அறிவாலயத்தில் நடந்த இந்த கூட்டத்தின்போது கருணாநிதி மதுரை திமுகவினருக்கு அறிவுரை கூறிப் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
மதுரை
மாநகரின் பிரச்சினைகளை எல்லாம் நானும், பொதுச் செயலாளரும், நம்முடைய
தலைமைக் கழகத்தின் செயலாளர்களும் இதுவரையிலே கேட்டறிந்து எல்லோருடைய
ஒத்துழைப்போடும் - எல்லோருடைய நல்ல உணர்வுகளோடும் ஒன்றிக் கலந்த தீர்மானமாக
- இனி மதுரையிலே அங்கே புயல், இங்கே புயல், அங்கே கூச்சல், இங்கே குழப்பம்
என்ற செய்திகள் வெளிவராத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட நாமெல்லாம் ஒன்றாக
பணியாற்றுகிறோம், நமக்குள் வேறுபாடு கிடையாது என்ற முடிவினை எடுப்பதற்கு
இவ்வளவு நேரம் எல்லோரும் கலந்து பேசி தெரிவித்த கருத்துக்களையெல்லாம்
கேட்டறிந்திருக்கிறோம்.
என்னை பொறுத்தவரையில் நம்முடைய பேராசிரியர்
அன்பழகனும், துரைமுருகனும், மற்றவர்களும் எடுத்துக்காட்டியதைப்போல
தமிழ்நாட்டிலேயே தி.மு.க.வினுடைய பாசறை - களம் அமைக்கின்ற பாசறை - எதற்கும்
துவண்டு விடாத பாசறை ஒன்று உண்டு என்றால், அது மதுரை தி.மு.க. பாசறை தான்
என்ற எண்ணத்தோடு இருப்பவன். இன்று நேற்றல்ல; மதுரையில் நண்பர்
முத்துவினுடைய காலத்தில் இருந்து இதுவரையிலே அந்த பாசறையின் மேன்மையை
காப்பாற்றி வந்திருக்கிறார்.
முத்துவே கூட சில மாறுபாடான எண்ணங்களோடு
நம்மிடம் இருந்து பிரிந்து எம்.ஜி.ஆரோடு சேர்ந்து நம்மை வசை பொழிந்த
காலத்திலே கூட என் மீதும், பொதுச் செயலாளர் மீதும், நம்முடைய கட்சியின்
மீதும், அவர் வைத்திருந்த மரியாதையை, மதிப்பை என்றைக்கும் குறைத்துக்
கொண்டவரல்ல.
திராவிட இயக்கம் தமிழ்நாட்டிலே செழித்தோங்க வேண்டும்,
இன்னும் பல வெற்றிகளைப் பெற வேண்டும் என்று நினைப்பவர்களில் ஒருவராகத்தான்
முத்து விளங்கினார். அவர் எப்படி கட்சியை வளர்த்தார் என்ற அந்த காலத்தில்
இருந்து இன்றைக்கு கட்சியைக் குலைப்பதற்கு யார்; யாருடைய துணையை நாடலாம்
என்று எண்ணுகிற இந்த காலம் வரையில் நான் அவரையும் அறிவேன், மதுரை மாநகரிலே
உள்ள திமுக நண்பர்களையும் அறிவேன்.
மதுரையில் இருந்த பனி மூட்டம்
மறைந்து உதய சூரியன் புதிய வேகத்தோடு கிளம்பியது என்ற நிலை ஏற்பட வேண்டும்.
என்ன முடிவெடுப்பது என்பதைப் பற்றி - அது எந்த முடிவாக இருந்தாலும் தலைமை
எடுத்த முடிவு அது. அழகிரி வேறு, ஸ்டாலின் வேறு அல்ல. இருவரும் திராவிட
முன்னேற்ற கழகம் தான். இருவரும் கட்சி ரீதியாக தங்களை திமுகவில்
ஒப்படைத்துக்கொண்டவர்கள் தான். இங்கே பேசும்போது சிலர் சொன்னார்கள். திமுக
குடும்பத்திற்கு யாரும் துரோகம் செய்யக்கூடாது என்றார்கள்.
அப்படி
செய்ய மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இந்த நம்பிக்கை நாளும்
வளரும், நாளும் தொடரும் என்ற நம்பிக்கை நலிந்து போகாது, நாசமாகாது என்ற
அந்த உறுதியோடு உங்களையெல்லாம் வழியனுப்பி வைக்கிறேன் என்றார் கருணாநிதி.
Comments