கத்துக்குட்டி அணிகள் போயாச்சு... இனிதாங்க உண்மையான உலக கோப்பை தொடர்

With Minnows Gone Real World T20 Begins கொழும்பு: இலங்கையில் நடைபெற்று வரும் டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுடன் 4 கத்துக்குட்டி அணிகள் வெளியேறிவிட்டன. இதனால் நாளை முதல் துவங்கும் சூப்பர்-8 சுற்று போட்டிகள் அதிக பரபரப்பு மிகுந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை உட்பட 12 அணிகள் பங்கேற்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று போட்டிகள் நடத்தப்பட்டது. நேற்றுடன் முடிவடைந்த லீக் சுற்றுடன் அயர்லாந்து, ஜிம்பாப்வே, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 4 அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. மீதமுள்ள 8 அணிகள் சூப்பர்-8 சுற்றிற்கு முன்னேறியுள்ளன.
இவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சூப்பர்-8 போட்டிகள் நடத்தப்படும். இதில் முதல் பிரிவில் இலங்கை, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து ஆகிய 4 அணிகள் உள்ளன. 2வது பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் உள்ளன.
இதுவரை லீக் போட்டிகளில் பல கத்துக்குட்டி அணிகள் ஆடியதால், மைதானங்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. மேலும் போட்டியில் பலமான அணிகள் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை நிலவியதால், பலம் குறைந்த அணிகள் பங்கேற்ற போட்டிகளை பார்க்க ரசிகர்களிடையே ஆர்வம் குறைவாக இருந்தது.
இந்த நிலையில் நாளை முதல் துவங்கும் பலமான 8 அணிகள் மோதும் சூப்பர்-8 சுற்று கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் லீக் சுற்றில் ஆடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றன. எனவே இவை இடம் பெற்றுள்ள 2வது பிரிவு அணிகளுக்கு இடையிலான போட்டி அதிக விறுவிறுப்பு கொண்டதாக இருக்கும்.
நாளை முதல் துவங்கும் சூப்பர்-8 சுற்றின் முடிவில், புள்ளிகளின் அடிப்படையில் 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அக்டோபர் 4 மற்றும் 5ம் தேதி அரையிறுதி போட்டியும், 7ம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெற உள்ளது.

Comments