மொத்த மின்சாரத்தில் மூன்றில் ஒரு பங்கை விழுங்கும் சென்னை.. தத்தளிக்கும் 'ரெஸ்ட் ஆப்' தமிழ்நாடு!

 Chennai Consumes One Third Power சென்னை: தமிழகம் முழுவதும் கடும் மின்சாரத் தட்டுப்பாடும், தடையும் அகோரமாக தலைவிரித்தாடி வரும் நிலையில் சென்னைக்கு மட்டும் தங்கு தடையின்றி மின்விநியோகத்தை உறுதி செய்வதில் மாநில அரசும், மின்வாரியமும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனவாம். மொத்த மின்சாரத்தில் மூன்றில் ஒரு பங்கை சென்னைக்குத் திருப்பி விடுகின்றனராம்.
ஆனால் இப்படி சென்னைக்கு மட்டும் தொடர்ந்து மின்சாரம் வழங்குவதற்கு பல முக்கியமான காரணங்கள் இருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை தினசரி சராசரி மின் உற்பத்தியானது 7500 மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இது சில சமயம் கூடலாம், குறையலாம். எப்படி இருந்தாலும் இதில் 2500 மெகாவாட் மின்சாரத்தை எடுத்து தனியாக வைத்து விடுகின்றனராம் - தலைநகர் சென்னைக்காக.
சென்னையில் ஒரு மணி நேரம் மட்டும்தான் அதிகாரப்பூர்வமாக மின்சாரம் தடைப்படுகிறது. ஆனால் தமிழகத்தின் இதர பகுதிகளில் குறைந்தது 10 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்தடை நிலவுகிறது.
முன்பு கடும் மின்தட்டுப்பாடு நிலவிய காலத்தில் சென்னையில் மின்தடையே இல்லாத நிலை இருந்தது. ஆனால் தமிழகத்தின் இதர பகுதிகளில் இதற்கு கடும் அதிருப்தி எழுந்ததைத் தொடர்ந்து 1 மணி நேர மின்தடையை அமல்படுத்தினர். பின்னர் இதை 2 மணி நேரமாக உயர்த்தினர். தற்போது மீண்டும் ஒரு மணி நேரமாக மாற்றியுள்ளனர்.
தற்போது காற்றாலை மின் உற்பத்தி கடும் பாதிப்பை சந்திக்க ஆரம்பித்துள்ளது. காரணம் காற்று குறைந்து விட்டதால். இதனால் தமிழகத்தில் கடும் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தற்போது காலையில் வெறும் 130 மெகாவாட் மின்சாரம்தான் உற்பத்தி செய்யப்படுகிறதாம். மாலையில் 2000 மெகாவாட் மின்சாரம் வரை கிடைக்கிறது. இப்படி காற்றாலை மின்சாரம் கைவிட்டதால் மின்வாரியம் பெரும் தவிப்புக்குள்ளாகி தமிழக மக்களை நட்டாற்றில் விட்டுள்ளது.
சரி சென்னைக்கு மட்டும் ஏன் தொடர்ந்து மின்சாரம் வழங்கப்படுகிறது, பிற பகுதிகளில் ஏன் பாரபட்சம் காட்டுகிறீர்கள் என்று மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டால், சென்னை தமிழகத்தின் தலைநகர் மட்டுமல்ல இந்தியாவின் மிகப் பெரிய நகரங்களில் ஒன்றாகும். இந்தியாவின் நான்கு பெரும் நகரங்களில் ஒன்றாகவும், கிட்டத்தட்ட தென்னிந்தியாவின் தலைநகராகவும் இது விளங்குகிறது.
தலைமைச் செயலகம், முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவை சென்னையில் உள்ளன. பல நாட்டுத் தூதரகங்கள் உள்ளன. பெரும் பெரும் உலகப் புகழ் பெற்ற தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவர்களை இங்கு வரவழைக்க தமிழக அரசு பெரும் முயற்சிகளை எடுத்து அழைத்து வந்துள்ளது. இவர்களுக்கு நாம் நிச்சயம் தொடர்ந்து மின்சாரம் தந்தாக வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் வேறு இடங்களுக்குப் போய் விடும் அபாயம் உள்ளது. அதேபோல சென்னையில் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் பெருகியுள்ளன. இவர்களுக்கும் மின்சாரம் தந்தாக வேண்டும். இல்லாவிட்டால் அவர்களும் இடத்தைக் காலி செய்து விடுவார்கள்.
இப்படிப் பல்வேறு முக்கிய காரணங்களால் சென்னைக்கு தங்கு தடையின்றி மின்சாரம் தந்தாக வேண்டிய நிலை உள்ளது. இதில் நாம் தவறி விட்டால், சென்னைக்கு வருவதற்கு எதிர்காலத்தில் தொழில்நிறுவனங்கள் தயங்கும் நிலை ஏற்படும், இதனால் அரசுக்குப் பொருளாதார ரீதியில் பல பாதிப்புகள் ஏற்படும், சென்னைக்கும் கெட்ட பெயர் ஏற்படும். இதனால்தான் ஒரு மணி நேரம் என்ற குறைந்தபட்ச மின்தடையை மட்டும் சென்னையில் அமல்படுத்தி வருகிறோம்.
தமிழகத்தின் இதர பகுதிகளைப் போல சென்னையிலும் பல மணி நேரம் மின்தடையை அமல்படுத்துவது என்பது கண்டிப்பாக இயலாத காரியம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

Comments