சென்னை: தமிழகத்தை ஒளிமயமான மாநிலமாக மாற்றுவோம் என்று தேர்தல்
நேரத்தில் ஆட்சியாளர்கள் வாக்குறுதி அளித்தனர். ஆனால் தமிழகத்தில் எந்த
ஒளியையும் காணவில்லை என்று பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில்
நிலவும் கடும் மின்வெட்டை கண்டித்து, பாமக சார்பில் சென்னை கலெக்டர்
அலுவலகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில தலைவர்
ஜி.கே. மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, துணை தலைவர்
கே.என்.சேகர், திருக்கச்சூர் ஆறுமுகம், கோபால், வழக்கறிஞர் பாலு, வடசென்னை
மாவட்ட தலைவர் சுரேஷ் குமார், மாவட்ட செயலாளர்கள் கன்னியப்பன்,
பி.கே.சேகர், ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில்
பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,
தேர்தல்
நேரத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாநிலம் முழுவதும் தடை இல்லாத
மின்சாரம் வழங்குவோம். தமிழகத்தை ஒளிமயமான மாநிலமாக உருவாக்குவோம் என்று
வாக்குறுதி அளித்தனர். ஆனால் இப்போது சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் 16
மணிநேரம் மின்தடை அமலில் உள்ளது. ஒளிமயமாக மாற்றுவதாக கூறிய நிலையில்,
தற்போது எந்த ஒளியையும் காணோம்.
தமிழகத்தில் மின்சாரம் இல்லாமல்
அனைத்து தொழில்களும் முடங்கிவிட்டன. தொழிலாளர்கள் பசி, பட்டினியுடன்
போராடுகின்றனர். கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட இன்னும் 1 ஆண்டு ஆகும்
என்று கூறுகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மின் தட்டுப்பாட்டை
சீரமைக்க என்ன வழி? இது குறித்து ஆட்சியாளர்களும், அதிகாரிகளும்
யோசிக்கவில்லை.
புதிய மின் திட்டங்கள் தொடங்காமலும், திட்டமிட்டு
மின் வினியோகம் செய்யாமலும் விட்டதால் தான், தற்போது இந்த மின்வெட்டு
ஏற்பட்டுள்ளது என்றார்.
Comments