நித்தியானந்தாவால் மதுரை ஆதீனம் பறிபோகிறது- அரசு கையகப்படுத்துகிறது!

 Rules Not Followed Select Nithyananda Tn Govt
சென்னை: நித்தியானந்தாவை இளைய மடாதிபதியாக நியமித்ததில் உரிய விதிகள் பின்பற்றப்படாத மதுரை ஆதீனத்தை கையகப்படுத்துவது தொடர்பாக வழக்குத் தொடர இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வழக்கு என்ன?
மதுரை அருணகிரிநாதர், நித்தியானந்தாவை இளைய மடாதிபதியாக நியமித்ததை எதிர்த்து பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஜெகதலபிரதாபன் என்பவர் தமது மனுவில், குற்ற வழக்குகளில் சிக்கிய நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்ததில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன என்று புகார் கூறியிருந்தார்.இந்த மனுவுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்திருந்தார்.
விதிமீறல்- கையகப்படுத்த நடவடிக்கை
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஆர்.சுப்பையா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தமிழ்வளர்ச்சித்துறை செயலாளர் எம்.ராஜாராம் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், நித்யானந்தாவை 293-வது ஆதீனமாக நியமித்ததில் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்று மனுதாரர் கூறியுள்ளார். சட்டப் பிரிவு 59-ன் ஒரு ஆதீனத்தை நியமிக்கும் விதிமுறைகளை மதுரை ஆதீனம் பின்பற்றவில்லை. இதனால் இந்த சட்டப் பிரிவின் படி அதாவது ஒரு ஆதீனம் விதிகளை மீறி செயல்பட்டிருந்தால் அந்த அதீனத்தை தலைமை பொறுப்பிலிருந்து நீக்குவது அல்லது அதன் சொத்துகளை கையகப்படுத்துவது என்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் . எ னவே இது தொடர்பாக ஒரு சிவில் வழக்கு தொடருவதற்கு இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த வழக்கு அக்டோபர் 1-ந் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Comments