அமெரிக்காவில் மூடப்படும் வால்மார்ட் நிறுவனத்தை இந்தியாவில் திறக்க அனுமதிப்பதா?: அத்வானி

 India Allows Walmart While New York Shuts Walmart Out டெல்லி: அமெரிக்கர்களின் கடும் எதிர்ப்புக்குள்ளாகி இருக்கும் வால்மார்ட் நிறுவனத்தை இந்திய அரசு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி சாடியுள்ளார்.

தமது வலைப் பூ பக்கத்தில் அத்வானி எழுதியுள்ளதாவது:

சில்லரை வர்த்தகத்தில் வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் முதலீடு செய்ய இந்தியா அனுமதி அளித்த அதே செப்டம்பர் 14-ந் தேதியன்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வால்மார்ட் நிறுவனத்தை இழுத்து மூடக் கோரி பிரம்மாண்ட போராட்ட நடத்தப்பட்டிருக்கிறது.
கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதியன்று அமெரிக்காவின் பணக்கார நகரங்களில் ஒன்றான லாஸ் ஏஞ்சல்ஸில் வால்மார்ட் நிறுவனத்தின் சங்கிலித் தொடர் கடைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம் நட்த்தினர்.
அதற்கு முன்பாக ஜுன் 1-ந் தேதியன்று வாஷிங்டன் நகரிலேயே வால்மார்ட் நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரம்மாண்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.
வால்மார்ட் நிறுவனங்களால் சிறு வணிகர்களுக்கு பாதிப்பு இல்லை என்கிறது மத்திய அரசு. ஆனால் பிரபல வெளிநாட்டு ஊடகங்களோ, வால்மார்ட்டினால் சிறு வர்த்தகர்கள் எப்படியெல்லாம் அழிக்கப்படுகின்றனர் என்று விரிவான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுகின்றன.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் போது சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்று காங்கிரஸின் மூத்த தலைவர் பிரிய ரஞ்சன்தாஸ் முன்ஷி வலியுறுத்தியிருந்தார். அப்படி அன்னிய முதலீட்டை அனுமதிப்பது தேசவிரோத செயல் எனக் கூறினார். ஆனால் இப்போது அமெரிக்காவில் மூடப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் வால்மார்ட் நிறுவனத்தை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது என்று அத்வானி அதில் கூறியுள்ளார்.

Comments