காவிரி நீர்: சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் மீது வழக்குப் போட்டது தமிழக அரசு

 Cauvery Dispute Tamil Nadu Moves Sc டெல்லி: தமிழகத்துக்கு காவிரி நீரை கர்நாடகம் திறந்துவிட உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மனுத்தாக்கல் செய்துள்ளது.
தமிழகம் வழக்கு
தமிழகத்துக்கான காவிரி நீரை கர்நாடகம் திறந்துவிட மறுத்ததால் குறுவை சாகுபடி கைவிடப்பட்டது. தற்போது சம்பா சாகுபடிக்காக தமிழகம் நீர் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேலும் பிரதமர் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையத்தைக் கூட்டவும் தமிழக அரசு வலியுறுத்தியிருந்தது.
இதையடுத்து பிரதமர் அலுவலகத்தை பிடிபிடியென பிடித்த உச்சநீதிமன்றம், காவிரி நதிநீர் ஆணையத்தைக் கூடடும் தேதியை அறிவிக்க உத்தரவிட்டது.
காவிரி ஆணைய கூட்டம்
பின்னர் பிரதமர் தலைமையில் நடைபெற்ற காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களின் சம்பா சாகுபடிக்காக குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 2 டி.எம்.சி. அடி தண்ணீர் வீதம் 24 நாட்களுக்கு காவிரி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார். வினாடிக்கு 9,000 கன அடி தண்ணீர் வீதம், 20.9.2012 முதல் 15.10.2012 வரை கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டும் என்று பிரதமரும் உத்தரவிட்டார். ஆனால் இந்த நீர் போதுமானது அல்ல என்று கூறி முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கவில்லை. கர்நாடக அரசும் நீரைத் திறந்துவிட மறுப்பு தெரிவித்தது.
முதல்வர் ஆய்வு
இதைத் தொடர்ந்து தமிழகத்திற்குரிய பங்கினை கர்நாடகம் திறந்துவிட உத்தரவு பிறப்பிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வது தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவில், காவியில் தமிழகத்திற்குரிய பங்கினை கர்நாடகம் திறந்துவிட உத்தரவு பிறப்பிக்கக் கோரும் மனுவினை உடன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
இதனால் காவிரியில் தண்ணீர் திறந்துவிடக்கோரி தமிழக அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் மனு இதில், நாள் ஒன்றுக்கு 2 டி.எம்.சி. வீதம் 24 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடவேண்டும். வறட்சி காலங்களில் தமிழகத்தின் பங்கை விதிமுறைப்படி வழங்க காவிரிநதிநீர் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் டி.கே. ஜெயின் மற்றும் மதன் லோகுர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு வரும் 28-ந் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

Comments