"கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அடுத்த ஆண்டு உற்பத்தி துவங்கும்'

மும்பை: ""கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் பிரிவில், அடுத்த ஆண்டு மின் உற்பத்தி துவங்கும்,'' என, அணுசக்தித் துறை தலைவர், ஆர்.கே. சின்கா கூறினார்.
இந்திய அணுசக்தி மாநாடு, டில்லியில் நேற்று நடந்தது. மாநாட்டில், பங்கேற்ற ஆர்.கே.சின்கா கூறியதாவது: கூடங்குளம் அணு மின் நிலையத்தில், ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட முதல் பிரிவில்,
அடுத்த ஆண்டு மின் உற்பத்தி துவங்கும். அணுசக்தி கட்டுப்பாடு கழகத்தின் நிபந்தனைகளாலும், சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளாலும், மின் உற்பத்தி துவக்கும் நாளை, சரியாக கூற முடியாது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில், எரிபொருள் நிரப்பும் பணி நடந்து வருகிறது. இன்னும் சில மாதங்களில், இப்பணி நிறைவடையும். மின் உற்பத்தி ஆரம்பித்தால், தமிழகத்தின் மின் பற்றாக்குறை ஓரளவுக்கு குறையும். அதேநேரத்தில், இரண்டாவது மின் உற்பத்தி பிரிவு, குறிப்பிட்ட காலத்துக்குள் செயல்படத் துவங்கும். இன்றைய சூழ்நிலையில், தொழில் நுட்பம், மூலப்பொருள் போன்றவை பற்றி கவலைப்படத் தேவையில்லை. மக்களின் ஒப்புதலை பெறும் வகையில், நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். அணுக்கதிர் வீச்சால் ஏற்படும், அபாயம் பற்றிய விழிப்புணர்வை, மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். மகாராஷ்டிரா மாநிலம், ஜெய்தாபூரில், 9,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட, அணு மின் நிலையம் அமைப்பது தொடர்பாக, இறுதிக்கட்ட பரிசீலனை நடந்து வருகிறது. இவ்வாறு சின்கா கூறினார்.

Comments