ராஜபக்சேவின் வருகையை
தமிழகத்தில் உள்ள அத்தனைக் கட்சிகளும், தமிழ் உணர்வாளர்களும் கடுமையாக
கண்டித்து எதிர்த்தனர். சேலத்தில் ஒரு ஆட்டோ டிரைவர் தீக்குளித்து உயிர்
நீத்தார். இருப்பினும் மத்திய அரசு இதை அலட்சியப்படுத்தியது. ராஜபக்சேவும்
திட்டமிட்டபடி பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்துக்கு பாதுகாப்புடன் வந்து
போனார்.
ஆனால் அவரது வருகையை நிம்மதியில்லாத ஒன்றாக மாற்றி விட்டார்
வைகோ. ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் ம.பிக்கே படையெடுத்தார் வைகோ.
இருப்பினும் அங்குள்ள போலீஸார் அவரை எல்லையுடன் தடுத்து நிறுத்தினர்.
அப்படியும் அசராமல் சாலையில் அமர்ந்து இரவு பகலாக தொடர் தர்ணாப் போராட்டம்
நடத்தி உள்ளூர் மக்களையும் வியக்க வைத்து விட்டனர் மதிமுகவினர்.
இறுதியில்
வைகோ உள்ளிட்டவர்களைப் போலீஸார் கைது செய்தனர். இருப்பினும் சிறந்த
மரியாதை கொடுத்து, எந்தவிதப் பிரச்சினையும் செய்யாமல் போராட்டம்
நடத்தியதற்காக பாராட்டும் தெரிவித்து, மாலை அணிவித்து மரியாதையுடன்
விடுவித்தனர்.
இந்த நிலையில் தாங்கள் சென்ற பேருந்துகளில் வைகோ
உள்ளிட்டோர் சென்னை திரும்பிக் கொண்டுள்ளனர். இன்று காலை அவர்கள் சென்னை
வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆந்திராவில் மழை பெய்து
வருவதால் அவர்களின் வருகை தாமதமாகியுள்ளது. இன்று மாலைதான் வைகோ
உள்ளிட்டோர் சென்னை வரவுள்ளனர்.
இதுகுறித்து மதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில்,
மத்திய
பிரதேசம், சாஞ்சியில் சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிரான
கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்ற ம.தி.மு.க பொது செயலாளர்
வைகோ மற்றும் 1500 கழகத் தோழர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30
மணிக்கு சென்னை வருகை தந்து அண்ணா சதுக்கத்தில் உள்ள அண்ணா நினைவிடத்தில்
மலர்வளையம் வைத்து பத்திரிகையாளர்களைச் சந்திக்க உள்ளார் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை திரும்பும் வைகோ உள்ளிட்டோரை வரவேற்க மதிமுகவினரும், தமிழ் உணர்வாளர்களும் திரண்டு காத்துள்ளனர்.
Comments