இந்தியாவின்
முதல் சீக்கிய பிரதமர் என்ற பெருமையைப் பெற்ற மன்மோகன் சிங், சிறந்த
பொருளாதார மேதை என்றும் புகழப்பட்டவர்.
ஆனால் அவரது ஆட்சிக்காலத்தில்தான்
இந்தியா மிகப் பெரிய பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. விலைவாசி
விண்ணைத் தொட்டு எகிறிக் கொண்டிருக்கிறது. அவரது தலைமையிலான காங்கிரஸ்
கூட்டணி அரசு இதுவரை இந்தியா கண்டிராத அளவிலான இமாலய ஊழல் புகார்களைச்
சந்தித்து திணறிக் கொண்டிருக்கிறது.
இப்படிப்பட்ட நெருக்கடியான
நிலையில் நாளை பிரதமர் மன்மோகன் சிங்குக்கு 80வது பிறந்த நாள் வருகிறது.
இதை எளிமையாக, அமைதியாக கொண்டாட பிரதமர் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
90களில்
நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நிதியமைச்சராக
இருந்தவர் மன்மோகன் சிங். அவரது நிதியமைச்சர் பதவிக்காலத்தில்தான் இந்தியா
பல்வேறு பொருளாதார சீர்திருத்த திட்டங்களைக் கண்டது. இதனால் மன்மோகன் சிங்
அனைவராலும் பாராட்டப்பட்டார். அவரது துணிச்சலும் புகழப்பட்டது. ஆனால் ஒரு
நிதியமைச்சராக சிறப்பான செயல் புரிகிறார் என்று பாராட்டப்பட்ட மன்மோகன்
சிங், ஒரு பிரதமராக அந்தப் பெயரைப் பெறவில்லை என்பதே உண்மை.
விண்ணைத்
தொட்டுள்ள விலைவாசி, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, ஊழல் புகார்கள், எந்தப்
பிரச்சினை குறித்தும் பேச மாட்டேன் என்கிறார் என்ற வருத்தங்கள்,
எதிர்க்கட்சிகளின் சரமாரி தாக்குதலை அதிரடியாக சமாளிக்கத் தவறி விட்டார்
என்ற குற்றச்சாட்டு என அவரைச் சுற்றி நாலாபுறமும் புகார் பட்டியலாகவே
உள்ளது.
இதற்கு உச்சகட்டமாக அமெரிக்காவின் டைம் பத்திரிக்கை அவரை
மிகவும் மோசமான முறையில் விமர்சிக்கும் அளவுக்கு நிலைமை போய் விட்டது.
அண்டர் அச்சீவர் என்று அவரை சாடிய டைம் பத்திரிகைக்கு மத்திய அரசு கண்டனம்
தெரிவித்த போதிலும் அதைக் கூட மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு உறுதியுடன்
கையாளத் தவறி விட்டது என்பதே உண்மை.
மன்மோகன் சிங்கின் முதலாவது
ஆட்சிக்காலம் பெரிய அளவில் பிரச்சினைகளை சந்திக்கவில்லை. பொருளாதார
வளர்ச்சியும் கூட இரட்டை இலக்கத்தை கிட்டத்தட்ட நெருங்கியிருந்தது. ஆனால்
2வது ஆட்சிக்காலம் தொடங்கியது முதலே சர்ச்சைதான்.
ஸ்பெக்ட்ரம் ஊழல்
தொடங்கி லேட்டஸ்டாக வெடித்துள்ள சுரங்க நிறுவன அனுமதி மோசடி ஊழல் வரை
பெரும் பெரும் ஊழல் புகார்களை மன்மோகன் சிங்கின் ஆட்சி சம்பாதித்து
விட்டது.
1932ம் ஆண்டு இப்போதைய பாகிஸ்தான் பகுதியில் பிறந்தவர்
மன்மோகன் சிங். இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் இந்தியாவுக்கு அவரது
குடும்பம் இடம் பெயர்ந்தது. அவரது தந்தை ஒரு சாதாரண வியாபாரி. மன்மோகனுடன்
கூடப் பிறந்தவர்கள் 9 பேர். மன்மோகன் சிங் இளம் வயதிலேயே சிறப்பாக
படிப்பவர். இதைப் பார்த்த அவரது தந்தை ஒரு நாள் நீ இந்த நாட்டின் பிரதமர்
ஆவாய் என்று கூறினார். அவரது வாக்கு பலித்தது.
மன்மோகன் சிங் பிரதமர்
பதவிக்கு வந்ததே ஒரு ஆச்சரியமான நிகழ்வுதான். 2004ம் ஆண்டு காங்கிரஸ்
கூட்டணி ஆட்சியைப் பிடித்தபோது அனைவரும் சோனியா காந்திதான் பிரதமர் என்று
நினைத்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென மன்மோகன் சிங்கை பிரதமர் என்று
கைகாட்டி விட்டார் சோனியா. கிட்டத்தட்ட ஓ.பன்னீர் செல்வத்தை எப்படி
ஜெயலலிதா யாரும் எதிர்பாராத வகையில் முதல்வர் பதவியில் அமர்த்தினாரோ அதே
பாணியில்தான் மன்மோகனும் பிரதமர் பதவியில் அமர்ந்தார்.
நாளை 80
வயதைத் தொடும் மன்மோகன் சிங் வருகிற லோக்சபா தேர்தலுக்குப் பின்னர்
மீண்டும் பிரதமர் பதவிக்கு வர மாட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியான ஒரு
விஷயம். அடுத்த பிரதமராக ராகுல் காந்தியை களம் இறக்க காங்கிரஸும் தயாராகி
விட்டது. இதற்கு வசதியாகத்தான் பிரணாப் முகர்ஜியை குடியரசுத் தலைவராக்கியது
காங்கிரஸ் என்பது நினைவிருக்கலாம்.
தனது பதவிக்காலத்தின்
கடைசிக்கட்டத்திலாவது இந்தியாவைச் சூழ்ந்துள்ள பிரச்சினைகளைத் தீர்த்து
தான் உண்மையிலேயே ஒரு மேதை என்பதை மன்மோகன் நிரூபிப்பாரா என்ற
எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Comments