இந்தியாவில், ஏழு மாநிலங்களில், மின்சார வாரியம் மிகவும் மோசமான
நிலையில் உள்ளது. உற்பத்தியிலும், பகிர்மானத்திலும் தடை உள்ளதால்,
ஆண்டுதோறும் நசிவடைந்து வருகிறது.
முன்னேற்றம்:
ராஜஸ்தான், உத்தர பிரதேசம், தமிழகம், மத்திய பிரதேசம், ஆந்திரம், பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட மாநிலங்கள், மின் உற்பத்தியில் தன்னிறைவு அடையவில்லை. குஜராத் மட்டும் மின் உற்பத்தியில் முன்னேற்றம் கண்டு வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக, மின்உற்பத்தியில் ஏற்பட்ட தடை, உற்பத்தி சாதனங்களின் விலையேற்றம், இலவச மின்சாரம் வழங்குதல் உள்ளிட்டவற்றால் தமிழ்நாடு மின்சார வாரியம், கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இந்த நஷ்டத்தை ஈடுகட்ட, மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவை அடுத்து, கடந்த, ஏப்ரல் மாதம் மின் கட்டணத்தை, தமிழ்நாடு மின்சார வாரியம் உயர்த்தியது. ஒன்பது ஆண்டு இடைவெளிக்குப் பின், மின் கட்டண உயர்வு அமலானது. தமிழகத்தில், 2006ம் ஆண்டு முதல், ஏற்பட்ட தொழில் வளர்ச்சி மற்றும் குடியிருப்பு வசதிகள் அதிகரிப்பால், மாநிலம் முழுவதும் மின் தேவை அதிகரித்திருக்கிறது. இதனால், மொத்த உற்பத்தியில், 25 சதவீத அளவில் பற்றாக்குறை ஏற்படுகிறது. மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும், உற்பத்தி செலவை சமாளிக்கும், கட்டண உயர்வு அமலாகவில்லை. இந்த நிலை தொடர்ந்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஆண்டு ஒன்றுக்கு, 8,000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. இவற்றை சரிகட்ட, மீண்டும் கட்டண உயர்வை அமல்படுத்து வதைத் தவிர, வேறு வழியில்லை.
ரூ.4,300 கோடி நஷ்டம்:
கடந்த ஆண்டில், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு, தமிழக அரசு, 9,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. இந்த ஆண்டு, 3,020 கோடி ரூபாய் கடனுதவியும், 1,000 கோடி ரூபாய் வட்டியில்லா கடனாகவும் வழங்க உள்ளது. இது, மின் வாரிய நடைமுறை சிக்கல்களைக் குறைக்க உதவும். இந்த நிதியாண்டில், இதுவரை, மின் வாரியத்துக்கு, 4,300 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மார்ச் மாதம் முடிவடைந்த பின், ஆண்டு அறிக்கை வெளியிடும் போது, மின் வாரியத்துக்கு ஏற்பட்டுள்ள முழுமையான நஷ்டம் குறித்து தெரியவரும்.
மின் கட்டணம் உயருமா?
இது குறித்து, மின் வாரிய உயர்அதிகாரிகள் கூறியதாவது: ஏழு மாநிலங்களில், மின் வாரியம் நஷ்டத்தை நோக்கிச் செல்கிறது; அவற்றில், தமிழகமும் ஒன்று. மத்திய அரசு கடனுதவி வழங்குகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு நஷ்டத்தைக் குறைக்கிறோமோ, அதற்கு தகுந்தாற் போல், கடனுதவியை தள்ளுபடி செய்யவும் மத்திய அரசு முன் வந்துள்ளது. மின் கட்டண உயர்வுக்கு தற்போது வாய்ப்பில்லை. கட்டண உயர்வை பொறுத்தமட்டில், மக்கள் மன்றத்தில் வைத்து, அவர்கள் ஆதரவு அளிக்கும் பட்சத்தில் தான், கட்டண உயர்வு அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Comments