எகிப்து பாணியில் 30-ந் தேதி ஹைதராபாத்தை உலுக்கப் போகும் தெலுங்கானா போராட்டம்

ஹைதாராபாத்: தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கையை வ்லியுறுத்தி வரும் 30-ந் தேதியன்று மிகப் பிரம்மாண்டமான போராட்டத்தை தெலுங்கானா ஆதரவாளர்கள் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

ஹைதராபாத்தில் எங்கு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கவில்லை. ஆனால் எகிப்து நாட்டில் அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட புரட்சி பாணியை தெலுங்கானா ஆதரவாளர்கள் பின்பற்றத் திட்டமிட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் பெண்களையும் குழந்தைகளையும் பல்லாயிரக்கணக்கில் களம் இறக்கவும் போராட்டக் குழுவினர் தீர்மானித்துள்ளனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தெலுங்கானா போராட்டக் குழுவைச் சேர்ந்த சீனிவாஸ் கெளட் கூறுக்கையில், நாங்கள் யாரும் எகிப்துக்கு சென்ற்தில்லை. ஆனால் இந்தியாவில் இருந்து எகிப்து நாட்டுக்கு சென்றோர் மூலமாக அங்கு நடைபெற்ற போராட்ட சிடிக்களை வாங்கியுள்ளோம். எங்களது தனி மாநிலக் கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் எகிப்து பாணியிலான புரட்சியை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.
எகிப்தில் சாலைகளை ஆக்கிரமித்து மக்கள் அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்தினர். இதேபோல் ஹைதராபாத்தை முடக்கும் வகையில் மிகப் பிரம்மாண்ட சாலைகள் ஆக்கிரமிப்புப் போராட்டத்தை தெலுங்கானா ஆதரவாளர்கள் நடத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.

Comments