கற்பழிப்புக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது, விஷமத்தனமானது - உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி

 Rape Abduction Charges Baseless Mal டெல்லி: என்மீது சுமத்தப்பட்டுள்ள கற்பழிப்புக் குற்றச்சாட்டு உண்மையற்றது, விஷமத்தனமானது, அதற்கு எந்த அடிப்படையும் இல்லை, என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. கிஷோர் சம்ரிதே. இவர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மீது செக்ஸ் புகார் கூறி உத்தரபிரதேச மாநிலத்தின் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஒரு பெண்ணையும், அவளது பெற்றோரையும் ராகுல் காந்தி சட்ட விரோதமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக
அதில் அவர் கூறி இருந்தார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்ததோடு, கிஷோர் சம்ரிதேவுக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறியது. அத்துடன் கிஷோர் சம்ரிதே மீது சி.பி.ஐ. விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அப்பீல் மனுவில் தனது புகார் மீது உயர்நீதிமன்றம் உரிய கவனம் செலுத்தவில்லை என்றும், தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யவேண்டும் என்றும் கூறி இருந்தார்.
அவரது அப்பீல் மனுவை விசாரித்த நீதிபதிகள் வி.எஸ்.சிர்புர்கர், டி.எஸ்.தாகூர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்ததோடு இந்த வழக்கு தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு ராகுல் காந்தி, உத்தரபிரதேச அரசு மற்றும் 4 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் ராகுல் காந்தியின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், தன் மீது மனுதாரர் கூறியுள்ள புகார் முற்றிலும் தவறானது மட்டுமின்றி விஷமத்தனமானது, தனது புகழைக் கெடுக்கும் உள்நோக்கம் கொண்டது என்று குறிப்பிட்டுள்ளார் ராகுல்காந்தி.
இத்தகைய பொய்யான குற்றச்சாட்டை வேண்டுமென்றே திட்டமிட்டு தொடர்ந்து சுமத்தி வரும் சம்ரிதே மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் நீதிபதிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments