கலாம் என்றால் கலகமா... கருணாநிதிக்கு முஸ்லீம்கள் கடும் கண்டனம்

 Muslim Outfit Condemns Karunanidhi For Kalam Speech
சென்னை: கலாம் என்றால் கலகம் என்று தவறான அர்த்தத்தைக் கூறி இஸ்லாமியர்களின் மத உணர்வுகளை திமுக தலைவர் கருணாநிதி புண்படுத்தி விட்டார் என்று இஸ்லாமிய அமைப்பும், பிற அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

சென்னையில் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில் கலாம் என்றால் கலகம் என்று தமிழில் பொருள் உண்டு என்று கருத்து தெரிவித்திருந்தார். இது அனைவரையும் அதிர வைத்துள்ளது. கருணாநிதியின் இந்தப் பேச்சுக்கு இதுவரை அப்துல் கலாம் கருத்து தெரிவிக்கவில்லை. அமைதியாக இருக்கிறார்.
அதேசமயம், இஸ்லாமியர்களிடையே இது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து திராவிட முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் இக்பால், கருணாநிதிக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 15-ந்தேதி தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியிடம் வருங்கால குடியரசு தலைவர் சம்பந்தமாக ஊடகங்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் இஸ்லாமியர்களின் மனதை ஈட்டியால் குத்தி கிழித்தவண்ணம் உள்ளது.

ஊடகங்கள் அப்துல்கலாமை சம்பந்தப்படுத்தி கேட்டதற்கு, கலாம் என்றால் `கலகம்'தான் என்று கருணாநிதி கூறியுள்ளார். இந்த வார்த்தையை எந்த அகராதியில் இருந்து அறிந்து சொன்னார் என்று தெரியவில்லை. ஒரு வார்த்தையின் பொருள் தெரியாமல் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தும் விதமாக பதில் கூறியுள்ளார்.

அரபி மொழியில் கலாம் என்றால் திருகுரானை குறிப்பிடுவார்கள். அப்துல் கலாம் என்றால் அப்துல் இறைசேவகன். கலாம் இறை வார்த்தை. இதற்கு இறை போதகர் என்ற பொருளாகும்.

இவ்வளவு புனிதமான வார்த்தையை கொச்சைப்படுத்த வேண்டும் என்று எத்தனை ஆண்டுகள் தவம் இருந்தாரோ என்று தெரியவில்லை. இதற்கு உடனே மறுப்பு தெரிவிக்க வேண்டும். இதை திராவிட முஸ்லீம் முன்னேற்றக்கழகம் வன்மையாக கண்டிக்கிறது. தவறும் பட்சத்தில் இஸ்லாமியர்களை ஒன்று திரட்டி தி.மு.க. தலைவர் கருணாநிதியை கண்டித்து வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலைமை ஏற்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

Comments