ஜெகன் சொத்துக் குவிப்பு வழக்கு: சிக்கும் சிமெண்ட் தயாரிப்பு நிறுவனங்கள்
ஹைதராபாத்: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி
மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் உள்ளிட்ட 3
சிமெண்ட் நிறுவனங்களுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளன.
மறைந்த
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி ஆட்சிக் காலத்தில் அமைச்சர்கள் உதவியுடன்
வருமானத்துக்கு அதிகமாக ஜெகன் மோகன் சொத்துக் குவித்தார் என்பது வழக்கு.
இந்த வழக்கில் ஜெகனுக்கு உதவிய அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் ஒருஅமைச்சருக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஜெகனையும் கைது
செய்திருந்த சிபிஐ அவரை 5 நாட்கள் கஸ்டடியில் வைத்து விசாரணை நடத்தியது.
இந்த விசாரணை இன்று முடிவடைகிறது.
இந்நிலையில் இந்தியா சிமெண்ட்ஸ்
நிறுவனத்தின் துணைத் தலைவரான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்
தலைவர் சீனிவாசனுக்கு இந்த வழக்கில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.
ராஜசேகர
ரெட்டி ஆட்சிக் காலத்தில் சிமெண்ட் நிறுவனத்துக்கு கூடுதலாக ஆற்று நீரைப்
பயன்படுத்திக் கொள்ளும் சலுகையைப் பெற்றதாகவும் இந்த சலுகைக்காக ஜெகன்
மோகன் ரெட்டியின் நிறுவனங்களில் முதலீடுகளை செய்ததாகவும் சிபிஐ தரப்பில்
குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனமானது கோரமண்டல் கிங்,
சங்கர் சக்தி மற்றும் ராசி கோல்டு ஆகிய பெயர்களில் சிமெண்ட் தயாரிப்பில்
ஈடுபட்டுள்ளது. ஆந்திரத்தில் விசாகா சிமெண்ட் இண்டஸ்ட்ரி என்ற பெயரில்
நிறுவனம் நடத்தி வருகிறது.
இதேபோல் பென்னா சிமெண்ட்ஸ் நிர்வாக
இயக்குநர் பிரதாப் ரெட்டி மற்றும் டால்மியா சிமெண்ட்ஸ் நிறுவன நிர்வாக
இயக்குநர் ஜே.எச். டால்மியா ஆகியோருக்கும் சிபிஐ இந்த வழக்கில் ஆஜராக
சம்மன் அனுப்பியுள்ளது. இரு நிறுவனங்களும் சிமெண்ட் தயாரிக்கும் மூலப்
பொருட்களான சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்கும் சுரங்கங்களை ராஜசேகர ரெட்டி
ஆட்சிக்காலத்தில் முறைகேடாக பெற்றனர் என்பது குற்றச்சாட்டு. இதற்காக
ஜெகனின் நிறுவனத்தில் பென்னா சிமெண்ட்ஸ் நிறுவனம் ரூ68 கோடியிலும் டால்மியா
சிமெண்ட்ஸ் நிறுவனம் ரூ95 கோடியிலும் முதலீடு செய்துள்ளதாக சிபிஐ தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments