தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக அத்வானி போட்டி?: அதிரடியாக யோசிக்கும் பாஜக!
டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர்
தேர்தலில் வேட்பாளராக பிரணாப் முகர்ஜி நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தேசிய
ஜனநாயகக் கூட்டணி முடிவெடுக்க முடியாமல் தவித்து வருகிறது. பேசாமல் பாஜக
மூத்த தலைவர் அத்வானியையே தேர்தலில் நிறுத்தலாம் என்றும் ஒருதரப்பில்
வலியுறுத்தப்படுவதாக வெளியான தகவலால் டெல்லி அரசியலில் பரபரப்பு
ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் இன்று நடைபெற்ற
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தில் தீவிரமாக இதுபற்றி விவாதிக்கப்பட்டது.
அத்வானியைப்
பொறுத்தவரையில் பாஜக சார்பிலோ தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பிலோ ஒரு
வேட்பாளரை நிறுத்தாமல் கலாம் போட்டியிடுவதாக இருந்தால் கலாமையோ அல்லது
ஜெயலலிதா, பிஜூ ஜனதா தளம் முன்னிறுத்தும் சங்மாவையோ ஆதரிக்கலாம் என்று
கருதுகிறார். இதைத் தான் இன்றைய தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்திலும்
அத்வானி வலியுறுத்தியிருக்கிறார். அத்வானியைப் போல சுஷ்மா ஸ்வராஜூம் இதே
போன்ற கருத்தை வலியுறுத்தியிருக்கிறார்.
பிரணாப் முகர்ஜியை நேரடியாக
எதிர்க்க வலுவான ஒரு வேட்பாளரை தேசிய ஜனநாயகக் கூட்டணியே நிறுத்த வேண்டும்
என்றும் சங்மா அல்லது கலாம் சரியான போட்டியாக இருக்கமாட்டார்கள் என்றும்
ஒருதரப்பினர் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.
ஆனால் பிரணாப்
முகர்ஜியை ஆதரித்துவிடலாம் என்பதுதான் ஐக்கிய ஜனதா தளத்தின் கருத்தாக
இருந்து வருகிறது. அவரை எதிர்க்க என்ன அவசியம் என்பதுதான் ஐக்கிய ஜனதா
தளத்தின் கேள்வி.
இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகக்
கூறப்படும் இன்னொரு விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தக் கூடியதாகவும்
இருக்கிறது. பிரணாப் முகர்ஜியை எதிர்த்து பேசாமல் அத்வானியை
நிறுத்திவிட்டால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெறாத கட்சிகள்
அனைத்துமே ஆதரிக்க வாய்ப்பிருக்கிறது என்றும் கூறப்பட்டது. இந்த யோசனை
அத்வானியையே ஒரு கணம் அதிர்ச்சியடைய வைத்ததாகவும் கூறப்படுகிறது.
அத்வானியை
நிறுத்துவதன் மூலம் இன்னொரு விஷயத்தையும் அறிந்து கொள்ள பாஜக
விரும்புகிறது. அதாவது 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கரம்
கோர்க்கக் கூடிய கட்சிகளை அடையாளம் காணவும் வாய்ப்பிருப்பதாகவும் இப்பொழுது
இருந்தே தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க வசதியாகவும் இருக்கும் என்றும்
கூறப்படுகிறது.
இருப்பினும் ஒருவேளை அத்வானி குடியரசுத் தலைவர்
வேட்பாளராக நிறுத்தப்பட்டால் நிச்சயம் பிரணாப் முகர்ஜிக்கு அது சவாலாக
இருக்க வாய்ப்பிருக்கிறது என்றே கூறப்படுகிறது.
ஏற்கனவே பிரதமர்
பதவிக்காக 'கொட்டாவி' விட்டு ஏமாந்து போனவர் அத்வானி. அந்த இடத்திற்கு
இப்போது மோடி வந்து உட்கார்ந்திருக்கிறார். இந்த நிலையில் குடியரசுத்
தலைவர் வேட்பாளர் என்ற 'புதிய கொட்டாவி'யை அத்வானி கையில் பாஜக கொடுக்கப்
போவதாக கூறப்படுவது உண்மையிலேயே பரபரப்பான விஷயம்தான்.
Comments