அரசியல் படுகொலைகளில் அச்சுதானந்தனுக்கும் தொடர்பு: ரமேஷ் சென்னிதலா தாக்கு

 Achuthanandan Has Links With Political Killings கொல்லம்: இடுக்கி மாவட்டத்தில் நடந்த அரசியல் படுகொலைகளில் கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனுக்கும் தொடர்பு உள்ளது என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார்.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்கிய சந்திரசேகரன் கடந்த மாதம் வெட்டி கொல்லப்பட்டார். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கேரள காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரமேஷ் சென்னிதலா ஒற்றப்பாலத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், 

தங்களுக்கு பிடிக்காதவர்களை கொலை செய்வது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வாடிக்கை. சந்திரசேகரன் கொல்லப்பட்டபோது அந்த கொலைக்கும், தங்கள் கட்சிக்கும் தொடர்பில்லை என்று முதலில் பினராய் விஜயன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் கூறினர். ஆனால் இந்த கொலையில் கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள். இதன் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் சுயரூபம் தெரிய வந்துள்ளது.

இடுக்கி மாவட்டத்தில் நடந்த பெரும்பாலான அரசியல் படுகொலைகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொடர்புண்டு. இதை அக்கட்சியின் செயலாளர் மணி வெளிப்படையாகவே கூறிவிட்டார். மணி கூறிய அரசியல் படுகொலைகள் நடந்தபோது அச்சுதானந்தன் தான் கட்சி தலைவராக இருந்தார். எனவே அவருக்கு தெரியாமல் இந்த கொலைகள் நடந்திருக்காது. அச்சுதானந்தனுக்கும் இந்த கொலைகளில் தொடர்பு உண்டு என்றார்.

Comments