அந்த போராட்ட குணத்துக்காகத்தான் அதிமுகவை ஆதரிக்கிறோம்: டி. ராஜேந்தர்
சென்னை: மக்கள் நலனுக்காக போராடும் போராட்ட குணம் கொண்ட அதிமுகவை மதித்து
புதுக்கோட்டை இடைத் தேர்தலில் அந்த கட்சிக்கு ஆதரவளிக்க முடிவு
செய்துள்ளதாக லட்சிய திமுக தலைவர் டி. ராஜேந்தர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மத்திய
அரசு பெட்ரோல் விலையை ஒரேயடியாக ரூ.7.50 உயர்த்தியது. நாடெங்கும் மக்கள்
கொதித்து எழுந்தபின் ரூ.2 மட்டும் குறைத்தது. உயர்த்தியது 4 மடங்கு.
குறைத்தது ஒரு மடங்கு. பெட்ரோல் விலை உயர்வுக்கு தி.மு.க. போராடியது என்பது
வெறும் சடங்கு.
திட்ட ஒதுக்கீட்டில் நிதி ஒதுக்குவதிலும் சரி,
தமிழ்நாட்டுக்கான மண்ணெண்ணெய் அளவை குறைப்பதிலும் சரி, மத்திய அரசு தமிழக
அரசை மாற்றான்தாய் போல் நடத்துகிறது. இருந்தும், மத்திய அரசின் பெட்ரோல்
விலை உயர்வை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா, அ.தி.மு.க. சார்பில் போராட்டம்
நடத்தினார். மத்திய அரசை எதிர்த்து மக்கள் நலனுக்காக போராடும் அந்த போராட்ட
குணத்தை லட்சிய தி.மு.க. மதிக்கிறது. அதனால், வருகிற 12-ந் தேதி
நடைபெறவுள்ள புதுக்கோட்டை இடைத்தேர்தலில், அ.தி.மு.க.வுக்கு எங்கள்
இயக்கமான லட்சிய தி.மு.க. தார்மீக ஆதரவை இதயபூர்வமாக
தெரிவித்துக்கொள்கிறது.
இந்த ஆதரவை, அ.தி.மு.க. பொதுச் செயலாளர்,
முதல்வர் ஜெயலலிதா ஏற்றுக்கொண்டதின் பேரில், இன்றும் நாளையும் புதுக்கோட்டை
இடைத்தேர்தலுக்கு, நான் (டி.ராஜேந்தர்) பிரசாரம் செய்கிறேன் என்று அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments