தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்கும் வழக்கில் ஆஜராக விலக்கு கோரிய ப.சிதம்பரம் மனு தள்ளுபடி
சென்னை: மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் தாம் வெற்றி பெற்றது
செல்லாது என்று தொடரப்பட்ட வழக்கில் தம்மை கூண்டில் ஏற்றி விசாரணை நடத்தக்
கூடாது என்று ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தின்
மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.
சிவகங்கை மக்களவைத் தொகுதியில்
அதிமுக சார்பில் போட்டியிட்டவர் ராஜகண்ணப்பன். அவரை எதிர்த்துப்
போட்டியிட்டவர் ப.சிதம்பரம். கடைசி சுற்றுவரை சிதம்பரம் தேறினாரா? தேறலையா?
என்ற குழப்பத்துக்கு மத்தியில் திடீரென அவர் 3 ஆயிரம் வாக்குகள்
வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து ராஜகண்ணப்பன்
வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் தம்மை கூண்டில் ஏற்றி விசாரணை நடத்தக் கூடாது என்று
ப.சிதம்பரம் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனுவுக்கு
எதிராக ராஜகண்ணப்பன் தரப்பும் பதில் மனுத்தாக்கல் செய்திருந்தது.
சிதம்பரத்தின்
மனுவை ஏற்பதா? நிராகரிப்பதா? என்பது குறித்து இன்று அறிவிக்கப்படும் என்று
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதி வெங்கட்ராமன்
தெரிவித்திருந்தார்.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழலில் ஏற்கெனவே
ப.சிதம்பரத்தின் பெயர் அடிபட்டு வரும் நிலையில் அரசியல் வட்டாரத்தில்
பெரும் எதிர்பார்ப்புக்குள்ளான இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
ப.சிதம்பரம் விலக்கு கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி
தெரிவித்தார்.
இந்தத் தீர்ப்பையடுத்து இந்த வழக்கில் ப.சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
Comments