பிரணாப்பை ஆதரிக்கலாம்... வேண்டாம்... சங்மாவை ஆதரிச்சா என்ன?: பாஜக கூட்டணியில் கருத்து வேறுபாடு

 Pranab Mukherjee S Presidential Candidature Brings டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜி நிறுத்தப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் தயவை எதிர்நோக்கியிருக்கும் அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்து தங்களது விசுவாசத்தை வெளிப்படுத்திவிட்டன. இருப்பினும் பிரணாப் முகர்ஜி ஒருமித்த வேட்பாளராக இருப்பாரா? அல்லது தேர்தலை சந்தித்தாக வேண்டியதிருக்குமா? என்பது பற்றி பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி நாளைதான் முடிவு செய்ய உள்ளது.

இதனிடையே பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எதிர்ப்பும் நிலவி வருகிறது. ஐக்கிய ஜனதா தளத்தின் சிவானந்த் திவாரி கருத்து தெரிவிக்கையில், பிரணாப்பை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்துவிடலாம் என்றார். ஆனால் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் சரத் யாதவோ, அது சிவானந்த் திவாரியோட தனிப்பட்ட கருத்து என்று கூறி நழுவிக் கொண்டார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிரோன்மணி அகாலிதளமோ அப்துல்கலாமுக்கு முன்னரே ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் பாஜகவுடன் நெருக்கம் பாராட்டும் அதிமுக முன்னிறுத்தியுள்ள பி.ஏ.சங்மாவை ஏன் வேட்பாளராக ஆதரிக்கக் கூடாது என்ற கேள்வியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சங்மாவைப் பொறுத்தவரையில் நல்ல மனிதர் என்று சில நாட்களுக்கு முன்பு சர்ட்டிபிகேட் கொடுத்திருந்தார் அத்வானி என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்நிலையில் பாஜகவின் நிலைப்பாடு பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முக்தார் அப்பாஸ் நக்வி, பிரணாப்பை அறிவித்துவிட்டு பிரதமர் ஆதரவு கோரி பாஜக தலைவர்களிடம் பேசுகிறார். அதை பிரணாப்பை அறிவிப்பதற்கு முன்பாகவே செய்திருந்தால் நன்றாக இருக்கும் என்றும் கோடிட்டுக் காட்டியுள்ளார். இதையே பாஜக ஒரு காரணமாக முன் வைத்து பிரணாப்பை ஆதரிக்காமலும் போகலாம் என்கின்றனர்.

இத்தனை யூகங்களுக்கும் நாளை நடைபெற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் விடை கிடைத்துவிடும்.

Comments