விஸ்வரூபம் கதை என்ன...? - கமல் பதில்
அடுத்த மாதம் (ஜூலை) 13-ந்தேதி வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சிகளை இன்று சிங்கப்பூர் ஐபா விழாவில் வெளியிட்டார் கமல்.
பின்னர் இந்தப் படத்தின் கதை குறித்து கமல்ஹாஸன் கூறுகையில், "விஸ்வரூபம் என்
மனதிலும் என் கனவிலும் கடந்த ஏழு வருடங்களாக உட்கார்ந்திருந்த கதை. என்
மனதில் இடம் பிடித்ததுபோல் ரசிகர்கள் மனதிலும் அது இடம்பிடிக்கும் என்று
நம்புகிறேன்.
கதை இதுதான்: அமெரிக்காவில் தனது மேற்படிப்பை முடிக்க
நினைத்த ஒரு நடுத்தர வர்க்கத்து தமிழ்ப் பெண் நிருபமா, அங்குள்ள விஸ்வநாதனை
திருமணம் செய்து கொள்கிறாள். 3 வருடம் காதல், ஊடல், கூடலின்றி இல்லறம்
நடத்தி பி.எச்.டி. முடித்து வேலைக்கும் செல்கிறாள். தனது நடன பள்ளியை
மனைவியின் தொந்தரவின்றி நடத்தி வருகிறார் விஸ்வநாத்.
ஆனால் நிருபமா
வேறு புதுக்கனவு காணுகிறாள். திருமணத்தை துறக்க விரும்புகிறாள். மன
முறிவிற்கு என்ன காரணம் சொல்வது என குழம்புகிறாள். விஸ்வநாத்திடம் ஏதாவது
களங்கம் உள்ளதா என்பதை துப்பறிய ஒரு ஆளை அமர்த்துகிறாள். கிணறு வெட்ட பூதம்
கிளம்புகிறது...
இதுதான் கதையின் மையக் கரு. இதில் யாரும்
எதிர்ப்பார்க்காத சில காட்சிகள் உண்டு. முழுசாக சொல்லிவிட்டால் சுவாரஸ்யம்
போய்விடுமே. அதான்.. மீதி வெள்ளித்திரையில்," என்றார்.
Comments