நித்தியானந்தாவுக்கு என்னை விட உயரம் ஜாஸ்தி- மதுரை ஆதீனம்

 Madurai Aadheenam Hails Nithyanantha
மதுரை: நித்தியானந்தாவைப் போல் ஆஜானுபாகுவான ஒருவரை பார்க்க முடியுமா இவருக்கு பட்டம் சூட்டு என சிவன் என் மனதில் கூறினார். நான் போர்க்குணம் உடையவன். அதுபோல் ஜாடிக்கேற்ற மூடியாக நித்யானந்தா உள்ளார். அவர் என்னை விட உயரமானவர் என்று கூறியுள்ளார் மதுரை ஆதீனம்.

மதுரை ஆதீனத்திற்கு நேற்று கனகாபிஷேகம் செய்தார் நித்தியானந்தா. இதையொட்டி ஆதீனத்திற்கு தங்க கிரீடம் அணிவிக்கப்பட்டு, தங்கக் காசு மற்றும் மலர்கள் கொண்டு அபிஷேகம் செய்தார் நித்தியானந்தா.
பி்ன்னர் மதுரை ஆதீனம் பேசுகையில், சிவன், பார்வதி கொடுத்த பரிசு நித்தியானந்தா. நான் மறுத்தும், 40 ஆண்டுகால ஆதீன வாழ்க்கையில், நான் படைத்தசாதனைகளை கருத்திற்கொண்டு, "வாழ்நாள் சாதனையாளர் விருது' என்ற அடிப்படையில், எனக்கு கனகாபிஷேகம் செய்துள்ளார். அவர் நூறு ஆண்டு வாழ்வார்.

நான் ஆண், பெண்ணிடம் அன்பாக நலம் விசாரிப்பேன். நகைச்சுவையாக பேசுவேன். அதுபோல் நித்தியானந்தா உள்ளார். எவ்வளவு துன்பம் வந்தாலும் அவர் சிரித்து பழகும் விதம் எனக்கு பிடிக்கும்.
தமிழகத்தில் உள்ள 18 ஆதீனங்களை மிஞ்சும் வகையில் உள்ள வாரிசாக இருப்பவர் நித்தியானந்தா. இவரை போல் ஆஜானுபாகுவான ஒருவரை எங்காவது பார்க்க முடியுமா. இவருக்கு பட்டம் சூட்டு என சிவன் என் மனதில் கூறினார். நான் போர்க்குணம் உடையவன். அதுபோல் ஜாடிக்கேற்ற மூடியாக நித்தியானந்தா உள்ளார். அவர் என்னை விட உயரமானவர்.

எங்களை அவதூறு பேசியவர்கள் ஓடிவிட்டனர். ஆதீன மீட்பு குழு, பாதுகாப்பு குழுவிடம் விசாரித்த ஆர்.டி.ஓ.,ஓராண்டு ஆதீனம் பக்கமே போகக்கூடாது என எதிர்ப்பாளர்களை எச்சரித்தது எங்களுக்கு கிடைத்த வெற்றி. எங்கள் மீது வழக்கு தொடர்ந்தவர்கள், தொடர போகிறவர்கள் தோல்வி அடைவர், என்றார் ஆதீனம்.

பெங்களூரில் இருவரும் ஓய்வு
கனகாபிஷேகம் முடிந்ததைத் தொடர்ந்து மதுரை ஆதீனமும், நித்தியானந்தாவும் பெங்களூர் புறப்பட்டுப் போயுள்ளனர். மதுரையில் வெயில் கொளுத்தி வருவதாலும், பெங்களூரில் கிளைமேட் நன்றாக இருப்பதாலும், ஓய்வுக்காக இருவரும் அங்கு போயுள்ளனர்.

Comments