முதல் முறையாக பிரெஞ்சு ஓபன் கலப்பு இரட்டையர் பட்டத்தை வென்றது சானியா-பூபதி ஜோடி!

 Bhupathi Mirza Pair Win Maiden French Open Mixed Double
பாரீஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மகேஷ் பூபதி-சானியா மிர்சா ஜோடி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

நேற்று தனது 38வது பிறந்த நாளை கொண்டாடிய மகேஷ் பூபதிக்கு இது பிறந்த நாள் பரிசாக அமைந்தது.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் மகேஷ் பூபதி-சானியா மிர்சா ஜோடி, மெக்சிகோவின் சான்டியாகோ கொன்சாலஸ், போலாந்தின் கிளாடியா ஜான்ஸ் இக்னேசிக் ஜோடியை எதிர்கொண்டது.

அதிக உற்சாகத்துடன் காணப்பட்ட பூபதி, சானியாவுடன் சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

முதல் செட் டை-பிரேக்கர் வரை செல்ல, 7-6 என்ற புள்ளியில் இந்திய ஜோடி வெற்றிப் பெற்றது. 2வது செட்டில் சோர்ந்து போன எதிரணியை, 6-1 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடி வீழ்த்தியது. இதனையடுத்து 7-6, 6-1 என்ற நேர் செட்களில் இந்திய ஜோடி வெற்றிப் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
மகேஷ் பூபதி இதுவரை 4 இரட்டையர் பட்டம், 8 கலப்பு இரட்டையர் பட்டம் என்ற மொத்தம் 12 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். சானியாவுக்கு இது 2வது கிராண்ட் ஸ்லாம் வெற்றியாகும்.

பூபதியும், சானியாவும் இணைந்து இதுவரை 3 கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ளனர். இதில் 2ல் அவர்கள் பட்டம் வென்றுள்ளனர். இதில் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வெல்வது இதுவே முதல் முறையாகும்.

கடந்த 2009ம் ஆண்டு ஆஸ்திரேலியா ஓபன் கலப்பு இரட்டையர் பட்டத்தை சானியா-பூபதி ஜோடி வென்றுள்ளது. அதன் பின்னர் இருவரும் சேர்ந்து இப்போதுதான் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்கின்றனர்.

Comments