ஆளுங்கட்சியின் அராஜகத்தை எதிர்த்து நிற்க தேமுதிக, சிபிஎம்-க்கு தைரியம் இருக்கு: ஜி.ராமகிருஷ்ணன்

 Admk Govt Snatches More From People Cpm
புதுக்கோட்டை: ஆளும் அதிமுக அரசு மக்களுக்கு கொடுத்ததை விட அவர்களிடமிருந்து பறித்ததே அதிகம் எனறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் ஜாகீர் உசேனை ஆதரித்து புதுக்கோட்டை தொகுதியின் பல்வேறு பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது,
அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தல் முடிந்த கையோடு வரலாறு காணாத அளவிற்கு பால் விலை, பேருந்து, மின் கட்டணத்தை உயர்த்திவிட்டது. இதனால் மக்கள் படும் கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் அல்ல. லேப்டாப், மிக்சி, கிரைண்டர் போன்ற விலையில்லாத் திட்டங்களோடு ஒப்பிடும் போது இந்த அரசு மக்களுக்கு கொடுத்ததை விட அவர்களிடமிருந்து பறித்ததே அதிகம். இப்படி ஆளுங்கட்சி மக்களை கடுமையாக வதைக்கும்போது மக்கள் நலனில் அக்கறை உள்ள கட்சிகளால் வேடிக்கை பார்க்க முடியாது.

சட்டம்-ஒழுங்கு கட்டுக்குள் இருக்கும். மணல் கொள்ளையர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள். வழிப்பறிக் கொள்ளையர்கள் ஆந்திராவிற்கு ஓடிவிட்டார்கள் என்றெல்லாம் முழங்கினார்கள். ஆனால் இவர்களின் 11 மாத ஆட்சியில் 12 லாக்கப் மரணங்கள் நிகழந்துள்ளன. பரமக்குடியில் 6 அப்பாவி தலித்துகள் போலீசாரால் படுகொலை செய்யப்பட்டனர். நெல்லை நம்பியாற்றில் மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற சதீஸ் என்ற இளைஞர் லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டார். அந்த லாரியின் உரிமையாளர் அதிமுகவைச் சேர்ந்தவர் என்பதால் அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆளுங் கட்சியின் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுங்கட்சி என்கிற ஆணவத்தில் எத்தகைய அதிகாரத்தையும், அராஜகத்தையும் கட்டவிழ்த்து விட்டாலும் எதிர்த்து நிற்கும் தைரியம் தேமுதிகவிற்கும், மார்க்சிஸ்ட் கட்சிக்கும் உண்டு.

இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சி தோற்றால் ஆட்சி கவிழாது. தேமுதிக வெற்றி பெற்றால் அதிமுக தங்கள் மக்கள் விரோத நடவடிக்கைகளை திருத்திக் கொள்ள இதுவொரு வாய்ப்பாக இருக்கும். இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும் என்ற நடைமுறையை புதுக்கோட்டை தொகுதி வாக்காளர்கள் திருத்தி எழுத வேண்டும் என்றார்.

Comments