இந்தி எதிர்ப்பை அவமதிக்கும் கார்ட்டூனை பாடபுத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும்- ராமதாஸ்

சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை அவமதிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள படத்தை பாடபுத்தகத்தில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகம் வெளியிட்டுள்ள +2 பாடப்புத்தகத்தில் விடுதலைக்கு பிறகு இந்திய அரசியல் என்ற தலைப்பில் 1965ம் ஆண்டில் தமிழகத்தில் இந்தியை கட்டாய பாடமாக திணிக்க மத்திய அரசு முயன்ற போது அதை எதிர்த்து மாணவர்கள் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தினார்கள். இந்தி மொழி திணிக்கப்படாது என்று மத்திய அரசு அறிவித்த பிறகுதான் போராட்டம் ஓய்ந்தது.

இப்போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் கேலி சித்திரம் இடம் பெற்றுள்ளது. இந்திய வரலாற்றில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய போராட்டத்தை, புரிந்து கொள்ளாமல் நடத்தப்பட்டது என்று கூறி கொச்சைப்படுத்துவது கண்டிக்கத்தக்கது ஆகும். 1967ம் ஆண்டில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு இப்போராட்டம் தான் அடிப்படையாக அமைந்தது.

இந்திய வரலாற்றிலும் தமிழக வரலாற்றிலும் முத்திரை பதித்த போராட்டத்தை புரிந்து கொள்ளாமல் நடத்தப்பட்டது என்று கொச்சைப்படுத்தும் வகையில் வரையப்பட்ட கேலி சித்திரத்தை பாடப்புத்தகத்தில் இடம் பெற செய்திருப்பது தமிழக மக்களையும், மாணவர்களின் மொழிபற்றையும் அவமதிக்கும் செயலாகும். இந்த கேலி சித்திரத்தை உடனடியாக +2 பாடபுத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Comments