ஜனாதிபதி வேட்பாளரை முடிவு செய்வதில் சிக்கல் : 4ம் தேதி காங்., செயற்குழு ஆலோசனை
கட்சித் தலைவர் சோனியா ஒரு வார கால விடுமுறைக்கு பின், நேற்று முன்தினம் டில்லி வந்தவுடன், இந்தக் கூட்டத்தின் தேதி முடிவானது. கட்சி, ஆட்சிகளில் முக்கிய முடிவுகள் எல்லாம் சோனியா தலைமையில் இயங்கி வரும், "கோர் கமிட்டி'யில் எடுக்கப்படுவதால், கடந்த 18 மாதங்களாக இக்கூட்டம் நடைபெறவில்லை.
பீகார், உத்தர பிரதேசம், பஞ்சாப் சட்டசபைத் தேர்தல்களில் கட்சியின் வேட்பாளர்கள் படுதோல்வி அடைந்ததற்கு பிறகு இந்தக் கூட்டம் நடக்கிறது. ஆந்திராவில் நடக்கவிருக்கும் 18 சட்டசபை இடைத்தேர்தல்களை ஒட்டியும் நடக்கிறது.
கெட்ட பெயர்:நாட்டில் முடங்கிய பொருளாதாரம், ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி, பெட்ரோல் விலை உயர்வால் கட்சிக்கு ஏற்பட்ட கெட்ட பெயர் ஆகியவை குறித்து விவாதம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஜனாதிபதி தேர்தல்களைப் பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சியின் சார்பில் சில வேட்பாளர்கள் பெயர் கடந்த சில மாதங்களாக அடிபட்டு வந்தாலும், சோனியா தன்னுடைய விருப்பத்தை இதுவரை மூத்த கட்சித் தலைவர்களிடம் தெரிவிக்கவில்லை.
யார்?பிரதமர் மன்மோகன் சிங்கையே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தலாம் என, சில மூத்த தலைவர்கள் விரும்புகின்றனர். ஆனால், தான் ஜனாதிபதி பதவிக்கு நிற்க விரும்பவில்லை என மியான்மரிலிருந்து டில்லி திரும்புகையில், மன்மோகன் சிங் திட்டவட்டமாக பேட்டியளித்திருக்கிறார் . பல மாத காலமாக காங்கிரஸ் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் துணை ஜனாதிபதி அன்சாரி, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பெயர் அடிபடுகிறது. இடதுசாரி கட்சிகளுக்கு அன்சாரி நெருக்கமானவர் என்பதால், திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும், அரசியல்வாதிகள் தான் ஜனாதிபதி பதவிக்கு ஏற்றவர் என, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவும் கருத்து தெரிவித்த பிறகு, அன்சாரிக்கு வாய்ப்புகள் குறைகின்றன.
கேள்விக்குறி:பிரணாப் முகர்ஜியைப் பொறுத்தவரை இவருக்கு கட்சியில் ஒரு பிரிவின் ஆதரவு இருந்து வருகிறது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக மத்திய அமைச்சராக இருந்து வருகிற முகர்ஜி, தனக்கு அமைச்சர் பதவியிலிருந்து விடுதலை கிடைக்க வேண்டுமென விரும்புகிறார்.காங்கிரஸ் கட்சியில் ஜனாதிபதி வேட்பாளருக்கு மிக முக்கியமான தகுதி, சோனியாவிற்கு நம்பிக்கைக்குரியவராக இருக்க வேண்டும். பிரணாபிற்கு இந்தத் தகுதி இருக்கிறதா என்பது கேள்விக்குறி. அவர் அதிக அளவில் சுய சிந்தனையுடன் செயல்படுபவர் என்பதை பல சமயங்களில் நிரூபித்திருக்கிறார் என்ற பேச்சும் உள்ளது.மன்மோகன் சிங் அரசு பலவீனப்பட்டுள்ளதால், கடந்த சில மாதங்களாக சோனியா கட்சியிலும், ஆட்சியிலும் முக்கிய முடிவுகள் எடுக்கும் போது, பிரணாப் முகர்ஜியிடமும் கலந்து ஆலோசனை நடத்தி வருகிறார். ஆகவே, சோனியாவிற்கும், முகர்ஜிக்கும் இருந்து வந்த இடைவெளி இப்போது இல்லை என, கட்சியின் ஒரு தரப்பினரின் வாதம். இது சரியான வாதமா என்பது போகப் போகத்தான் தெரியும்.
அடுத்ததாக ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் லோக்சபா சபாநாயகர் மீரா குமார் பெயர், கடந்த சில நாட்களாக அடிபட்டு வருகிறது. சோனியாவின் நம்பகத்தன்மை என்ற தகுதியைப் பொறுத்தவரை அவரை வேட்பாளராக அறிவிப்பது சந்தேகத்திற்குரியதே! காங்., கட்சியை விட்டு விலகி வேறு கட்சிகளுக்கு மீரா குமார் முன்னர் சென்றவர், கடந்த மூன்றாண்டுகளில் 30 நாடுகளுக்கு மேல் வெளிநாட்டுப் பயணம் சென்றார் என்ற குற்றச்சாட்டு, அவர் மீது இருந்து வருகிறது.
ஆலோசனை நடத்தவில்லை:சோனியாவிற்கு நம்பகத்தன்மை என்ற வரிசையில் முதல் வேட்பாளர், கட்சியின் முன்னாள் பொருளாளர் மோதிலால் வோரா. ஆனால், அவருக்கு சில மாதங்களாக உடல் நலம் சரியில்லை. நம்பிக்கைக்குரியவர்கள் வரிசையில் கரண் சிங், சிவராஜ் படேல், எஸ்.எம்.கிருஷ்ணா, கி÷ஷார் சந்திர தேவ் ஆகியோர்களின் பெயர்களும் இருந்து வருகிறது.இறுதி முடிவு எடுக்கும் முன் சோனியா, தி.மு.க., தலைவர் கருணாநிதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்., கட்சித் தலைவர் சரத் பவார், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி போன்ற தலைவர்களோடு கலந்து ஆலோசித்து விட்டு தனது முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவு, அடுத்த 15 நாட்களுக்குள் எடுக்கப்படலாம். ஏன் என்றால் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பை தேர்தல் கமிஷன், ஜூன் 15ம் தேதி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஜூலை 25க்குள் புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.ஆகவே, காங்கிரஸ் செயற்குழுவில் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற முடிவை எடுக்க தற்போது வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
Comments