பிரணாப்தான் குடியரசுத் தலைவர் வேட்பாளர்: 13-ம் தேதி அறிவிக்கிறது காங்கிரஸ்!

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை நிறுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 15-ந் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்யும் அதிகாரம் சோனியா காந்திக்கு வழங்கப்பட்டது.
குடியரசுத் தலைவர் தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிட உள்ளது. இந்நிலையில் சோனியாவின் அரசியல் ஆலோசகரான அகமது படேல், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளார். இதனால் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் முடிவு செய்யப்பட்டு விட்டதாகவே கூறப்படுகிறது..

கூட்டணிக் கட்சிகளான திமுக, தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரீய லோக தளம் ஆகியவையும், ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் சமாஜவாதி, பகுஜன் சமாஜ் ஆகியவையும் காங்கிரஸ் நிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவு தரும் என்பது உறுதியாகிவிட்டது.

ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியானது தமது ஆதரவை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. எனினும் பிரணாப் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் என்று முறையில் அவருக்கு மம்தா தனது ஆதரவை அளிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே டெல்லியில் காங்கிரஸ் உயர்நிலைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் யாரையும் குடியரசுத் தலைவருக்காக முன்னிறுத்தி ஆலோசனை நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது.

Comments