தந்தையின் தொல்லையிலிருந்து தப்ப உறவினர் வீடுகளில் தங்கிப் படித்து 1014 மார்க் வாங்கிய பார்கவி!

 Bhargavi Scored 1014 Marks Plus2
விழுப்புரம்: ஜீ டிவியின் டாக் ஷோ மூலம் 3 கொலைகளைச் செய்த தனது தந்தையை அம்பலப்படுத்தி விழுப்புரம் பார்கவி, தனது தந்தை தனக்குக் கொடுத்து வந்த செக்ஸ் தொல்லையிலிருந்து தப்ப உறவினர்கள் வீடுகளிலும், காதலர் சதீஷ் வீட்டிலும் மாறி மாறி தங்கிப் படித்து வந்த சோகக் கதை வெளியாகியுள்ளது. இப்படிப் படித்தாலும், ஏகப்பட்ட மன உளைச்சலில் சிக்கியபோதும் பிளஸ்டூவில் அவர் 1014 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தை சேர்ந்த சேகர், அவருடைய மகள் லாவண்யா, அவரது காதல் கணவர் சிலம்பரசன் ஆகிய 3 பேரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மாயமாகி விட்டனர். அவர்கள் 3 பேரையும் பணத்திற்கு ஆசைப்பட்டு தனது தந்தை முருகன் கொலை செய்து வீட்டுக்கு அருகே புதைத்து விட்டதாக, எம்.குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த முருகனின் மகள் பார்கவி டாக் ஷோவின்போது தெரிவித்தார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது கொல்லப்பட்ட மூவரின் எலும்புகளும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

தந்தை குறித்து பார்கவி கூறுகையில், எனது தந்தை மோசமானவர். மகள் என்றும் பாராமல் எனக்கே செக்ஸ் தொல்லை கொடுத்து வந்தார். லாவண்யாவிடமும் தவறாக நடக்க முயன்றார் என்று கூறியிருந்தார்.
பார்கவி, விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார். தற்போது தான் பிளஸ்-2 தேர்வை எழுதி முடித்திருந்தார். சமீபத்தில் வெளியான பிளஸ்-2 தேர்வு முடிவில், இவர் 1200-க்கு 1014 மதிப்பெண் பெற்று உள்ளார்.

தனது வீட்டில் இவர் பெரும்பாலும் தங்கியதில்லையாம். காரணம், முருகன் கொடுத்து வந்த செக்ஸ் தொல்லைதான். இதனால் வீட்டில் இருக்காமல் உறவினர்கள் வீடுகளில் மாறி மாறித் தங்கிப் படித்து வந்தாராம். அதேபோல காதலர் சதீஷ் வீட்டிலும் தங்கியுள்ளார்.

தந்தையை அம்பலப்படுத்திய பார்கவி நேற்று விழுப்புரத்திற்கு காதலர் சதீஷ், அவரது குடும்பத்தார் மற்றும் போலீஸார் பாதுகாப்புடன் வந்தார். தான் படித்த பள்ளிக்குச் சென்ற அவர் அங்கு மாற்றுச் சான்றிதழை வாங்கிச் சென்றார். காதலர் வீட்டில் இருந்தபடி மேல் படிப்பை படிக்கப் போவதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், விழுப்புரம் டிஎஸ்பி சேகர் தலைமையிலான தனிப்படை போலீசார், கொலை செய்யப்பட்ட 3 பேருடைய சொந்த ஊரான நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொல்லப்பட்ட சேகரின் மனைவி ஜீவா மற்றும் அவருடைய உறவினர்கள், லாவண்யாவின் காதல் கணவர் சிலம்பரசனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடமும் தனித்தனியாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Comments