சிபிஐ ரெய்ட் எதிரொலி: குடும்பத்தோடு முன் ஜாமீன் கோரும் எதியூரப்பா
கர்நாடக மாநிலத்தில் சுரங்க ஊழல் தொடர்பாக முன்னாள் முதல்வர் எதியூரப்பா, அவரது மகன்கள், மருமகன் உள்ளிட்டோர் மீது நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதில் கர்நாடக முதல்வர் எதியூரப்பாவை முதல் குற்றவாளியாக சேர்த்துள்ளனர்.
இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் பெங்களூர், ஷிமோகா ஆகிய இடங்களில் உள்ள எதியூரப்பாவின் வீடுகள், அவரது மகன்கள் விஜயேந்திரா, ராகவேந்திரா ஆகியோரின் வீடுகள், மருமகன் ஆர். சோஹன் குமாரின் வீடு, மகனின் கம்பெனி, சுரங்க உரிமம் பெற எதியூரப்பா குடும்பத்திற்கு ரூ.20 கோடி கொடுத்த பெல்லாரியில் உள்ள சவுத் வெஸ்ட் மைனிங் கம்பெனி என மொத்தம் 8 இடங்களில் இன்று காலை 6.15 மணி முதல் மாலை 4 மணி வரை அதிரடி சோதனை நடத்தினர்.
இதற்கிடையே ஷிமோகாவில் உள்ள எதியூரப்பாவின் இளைய மருமகன் உதய் குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.
இதையடுத்து எதியூரப்பா எந்த நேரத்திலும் கைதாகலாம் என்ற சூழல் நிலவுகிறது. இந்நிலையில் எதியூரப்பா, அவரது மகன்கள், மருமகன் சோஹன் குமார் ஆகியோர் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர்.
சுரங்க ஊழல் விவகாரத்தால் முதல்வர் பதவியை இழந்த எதியூரப்பா ஏற்கனவே இது தொடர்பாக கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments