குடியரசுத் தலைவர் தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க பகுஜன் சமாஜ் முடிவு?

 Mayawati Hints Supporting Upa Nominee Presidential Poll டெல்லி: மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முன்னிறுத்தும் குடியரசுத் தலைவர் வேட்பாளரை மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரிக்கக் கூடும் எனத் தெரிகிறது.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் மாயாவதி கூறியதாவது:

சமாஜ்வாடி ஆட்சி

உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சி பொய்யான, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப் டாப், விவசாயிகளின் மின் கட்டண தள்ளுபடி, முதியோர்கள் மற்றும் வேலை இல்லா பட்டதாரிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசியது. ஆனால் மாநிலத்தில் நிதிநிலையோ அப்படியொன்றும் இல்லை.

ஐ.மு.கூட்டணிக்கு ஆதரவு

குடியரசுத் தலைவர் தேர்தலில் மற்ற அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு என்ன? என்று உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஐக்கிய முற்போக்கு கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி இவற்றின் சார்பில் குடியரசுத் தலைவர் பதவிக்கு யாரை நிறுத்தப் போகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள நாங்கள் விரும்புகிறோம். அவர்கள் வேட்பாளரை அறிவித்த உடனே, நாங்கள் எங்கள் முடிவை தெரிவிப்போம். எங்களுக்கு உகந்தவர் யாரோ? அவரை நாங்கள் ஆதரிப்போம்.

ஆனால் மூன்றாவது அணிக்கு ஆதரவு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி, இந்த இரண்டு அணியில் ஏதாவது ஒரு அணி நிறுத்தும் வேட்பாளரை மட்டுமே எங்கள் கட்சி ஆதரிக்கும். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால், இடையில் கவிழ்ந்து விடும் என்று சொல்ல முடியாது. அப்படி கவிழ நாங்கள் விடமாட்டோம். மத்தியில் மதவாத சக்திகள் ஆட்சிக்கு வராமல் தடுக்க, ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு அளிப்போம். ஆட்சியில் பங்கு பெறாமல் வெளியில் இருந்து ஆதரவு கொடுப்போம் என்றார் அவர்.

Comments