போலீஸ் மீது செருப்பு வீசிய நித்யானந்தா சீடர்கள் மீது வழக்கு

மதுரை: மதுரை ஆதீன மடத்திற்கு முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது செருப்பு வீசப்பட்டது தொடர்பாக நித்யானந்தா சீடர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நித்யானந்தாவை மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக நியமித்ததற்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. இந்நிலையில் ஆதீன மீட்புக் குழுவினர் தடையை மீறி மடத்திற்குள் சென்று வழிபடப்போவதாக அறிவித்தனர். அதன்படி நேற்று முன்தினம் மாலை இந்து மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் 7 பேர் மதுரை ஆதீன மடத்திற்கு வந்தனர்.

அவர்கள் நித்யானந்தாவே வெளியேறு என்று கோஷமிட்டனர். பின்னர் மடத்து வாசலில் சூடம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபட்டனர். தொடர்ந்து மடத்திற்குள் நுழைய முயன்றனர். ஆனால் அவர்களை உள்ளே விட நித்யானந்தா ஆதரவாளர்கள் மறுத்தனர். இதனால் அவர்களுக்கும் மீட்புக் குழுவினருக்கும் இடையே மோதல் மூளும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் மீட்புக் குவுவினரைக் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

இந்த நிலையில் நித்யானந்தாவின் ஆதரவாளர் ஒருவர் மடத்திற்கு வெளியே பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் மீது காலில் போட்டிருந்த செருப்பை எடுத்து வீசினார். இது ஒரு சப் இன்ஸ்பெக்டர் மீது பட்டது. இதனால் அவர் வெகுண்டார். போலீசாரும் கொந்தளித்து விட்டனர். இதையடுத்து அங்கு கூடிய நித்யானந்தா ஆதரவாளர்கள் போலீசாரை வேகமாக கீழே தள்ளி விட்டனர். பின்னர் செருப்பை வீசிய தங்களது ஆளை, வேகமாக உள்ளே இழுத்துக் கதவைப் பூட்டிக் கொண்டனர்.

இதையடுத்து மதுரை போலீஸ் கமிஷனருக்கு தகவல் பறந்தது. இந்நிலையில் செருப்பு வீச்சு தொடர்பாக மேல்மதுரை கிராம நிர்வாக அலுவலர் முனியாண்டி என்பவர் விளக்குத்தூண் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் நித்யானந்தா சீடரான முத்துக்கிருஷ்ணன் உள்பட சிலர் மீது அரசு அதிகாரிகளை அவமானப்படுத்துவது, காயப்படுத்த முயல்வது உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Comments